செய்திகள்
கோப்பு படம்

பெண்கள் விடுதியில், புகுந்து 34 செல்போன்களை திருடிய வாலிபர் கைது

Published On 2020-01-13 10:49 GMT   |   Update On 2020-01-13 10:49 GMT
சென்னையில் பெண்கள் விடுதியில் புகுந்து, இணைய தள சேவையில் பிரச்சினை இருப்பதாக கூறி ஏமாற்றி கை வரிசை காட்டிய வாலிபர் சிக்கினார்.
சென்னை:

அரும்பாக்கம், திருமங்கலம், நொளம்பூர், ஜெ.ஜெ.நகர், கோட்டூர்புரம், பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் சில நாட்களாக ஒரே பாணியில் பெண்கள் விடுதியில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வந்தன. காலை 7 மணியில் இருந்து 8 மணிக்குள் விடுதிகளுக்கு செல்லும் இளைஞர் ஒருவர் ‘வைபை’ இணைப்பில் பிரச்சினை இருப்பதாக கூறி பெண்களை ஏமாற்றி சில செல்போன்களை ஒரே இடத்தில் சார்ஜர் போட சொல்லியுள்ளார். பின்னர் அந்த செல்போன்களை சுருட்டிக்கொண்டு தப்பி ஒடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இப்படி நூதன முறையில் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபரை பிடிக்க அண்ணாநகர் துணை கமி‌ஷனர் முத்துசாமி உத்தரவின் பேரில் திருமங்கலம் உதவி கமி‌ஷனர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையில் இடம் பெற்றிருந்த சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன், ஏட்டுகள் ரவி, ஜோசப், போலீஸ் காரர்கள் பாலசுப்பிரமணியன், ஜெயக்குமார் ஆகியோர் கொள்ளையனை பிடிக்க களம் இறங்கினர்.

அப்போது அவன் ஹெல்மெட்டை கழற்றாமலேயே திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த பகுதி முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து தீவிர விசாரணை நடத்தி குற்றவாளியை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவனது பெயர் பாலாஜி (31). தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையனை துப்பு துலக்கி கைது செய்த தனிப்படையை உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.
Tags:    

Similar News