செய்திகள்
நெல்லை கண்ணன்

நெல்லை கண்ணன் திருவனந்தபுரத்தில் தஞ்சம்?

Published On 2020-01-01 10:18 GMT   |   Update On 2020-01-01 10:18 GMT
நெல்லை கண்ணன் கேரள மாநிலம் திருவனந்தபுரம் சென்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மதுரை:

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் நெல்லை கண்ணன், கடந்த 29-ந் தேதி மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார். அங்கு பேசிய அவர், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பற்றி அவதூறாக பேசியதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பா.ஜனதா கட்சியினர், நெல்லை டவுனில் உள்ள நெல்லை கண்ணன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு சென்று பாரதிய ஜனதாவினரை சமரசம் செய்தனர். அப்போது நெல்லை கண்ணனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

அவரை ஆம்புலன்சு மூலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் பா.ஜனதா கட்சியினர் அங்கும் வந்து போராட்டம் நடத்தினர்.

இதனால் நெல்லை கண்ணனை, மதுரைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதுபற்றி மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு பேசினர். அவர்கள் சிகிச்சை அளிக்க உறுதியளித்தனர்.

இதனை தொடர்ந்து நெல்லை கண்ணன் சிகிச்சைக்காக ஆம்புலன்சு மூலம் மதுரை புறப்பட்டார். இதற்கிடையில் மதுரை பா.ஜனதாவினருக்கும் இந்த தகவல் கிடைத்தது. அவர்கள் 3 தனியார் மருத்துவமனைகள் முன்பு திரண்டனர். இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டது.

இதுகுறித்து நெல்லை கண்ணன் அழைத்து வரப்பட்ட ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மதுரையில் சிகிச்சை பெற முடியாது என தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தேசிய நெடுஞ்சாலை அருகே வந்த ஆம்புலன்சு, மீண்டும் வந்த வழியே திரும்பிச் சென்றது.

அதன்பிறகு நெல்லை கண்ணன் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் சென்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் பல்வேறு வழக்குகள் இருப்பதால் அதில் கைதாகாமல் இருக்க முன்ஜாமீன் பெறவும் நெல்லை கண்ணன் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

நெல்லை கண்ணன் மீது மதுரை மாநகரில் 17 போலீஸ் நிலையங்களில் பா.ஜனதா கட்சியினர் புகார் செய்துள்ளனர். விசுவ இந்து பரி‌ஷத் சார்பில் மாவட்ட தலைவர் சந்திரசேகரன், மாநகர போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

Tags:    

Similar News