செய்திகள்
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி மக்களின் மனநிலை 5 மாதங்களில் மாறியது ஏன்?

Published On 2019-10-25 02:53 GMT   |   Update On 2019-10-25 02:53 GMT
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி மக்களின் மனநிலை 5 மாதங்களில் மாறியது ஏன்? என்று அரசியல் கட்சிகள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சென்னை:

நாட்டில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வரும் தேர்தல்களில், வாக்களிக்கும் மக்களின் மனநிலை தேர்தலுக்கு தேர்தல் மாறிவருவதைத் தான் பார்த்திருக்கிறோம். ஆனால், சமீபகால தேர்தல்களில் அப்படியொரு மாற்றத்தை காணமுடியவில்லை. அதற்கு சான்றாக, 2014 மற்றும் இந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல், 2011, 2016-ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றை கூறலாம். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வும், தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும் தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளன.

தமிழகத்தை பொறுத்தவரை, இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சிக்கே வெற்றி என்ற நிலையே நீண்டகால வரலாறாக இருந்து வந்தது. ஆனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.

அதன்பிறகு நடந்த இடைத்தேர்தல்களிலும் எதிர்கட்சியான தி.மு.க.வின் கையே ஓங்கியிருந்தது. இதன் தாக்கம் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலித்தது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் தேனியை தவிர ஏனைய 38 இடங்களிலும் தி.மு.க.வே வெற்றி வாகை சூடியது.

இதனால், தொடர்ந்து வந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க.வுக்கே வெற்றி வாய்ப்பு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, இந்த 2 தொகுதிகளிலும், அதாவது விக்கிரவாண்டியில் தி.மு.க.வும், நாங்குநேரியில் தி.மு.க. கூட்டணியில் அங்கம்வகித்த காங்கிரசும் வெற்றி பெற்றிருந்தது.

எனவே, இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கே வெற்றி கிடைக்கும் என்று நம்பப்பட்ட நிலையில், தேர்தல் முடிவு தலைகீழாக அமைந்துவிட்டது. 2 தொகுதிகளிலுமே அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடியிருக்கிறார்கள்.



நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு 95 ஆயிரத்து 377 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு 61 ஆயிரத்து 932 வாக்குகளும் கிடைத்தன. அதேபோல், விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வனுக்கு 1 லட்சத்து 13 ஆயிரத்து 766 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் புகழேந்திக்கு 68 ஆயிரத்து 842 வாக்குகளும் பதிவாகியுள்ளன.

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி அங்கம்வகிக்கும் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில், தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் 5 லட்சத்து 22 ஆயிரத்து 993 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் பால் மனோஜ் பாண்டியன் 3 லட்சத்து 37 ஆயிரத்து 273 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

குறிப்பாக, நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் மட்டும் தி.மு.க.வுக்கு 56 ஆயிரத்து 306 வாக்குகளும், அ.தி.மு.க.வுக்கு 51 ஆயிரத்து 596 ஓட்டுகளும் கிடைத்தன. ஆனால், இந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் நிலைமை அப்படியே மாறியிருக்கிறது. அ.தி.மு.க.வுக்கு 43 ஆயிரத்து 781 வாக்குகள் கூடுதலாகவும், தி.மு.க. கூட்டணியான காங்கிரஸ் கட்சிக்கு 5 ஆயிரத்து 626 வாக்குகள் அதிகமாகவும் கிடைத்திருக்கின்றன.

இதேபோல், பாராளுமன்ற தேர்தலின்போது விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடம்பெற்றிருக்கும் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில், தி.மு.க. வேட்பாளர் ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) 5 லட்சத்து 59 ஆயிரத்து 585 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. கூட்டணியை சேர்ந்த பா.ம.க. வேட்பாளர் வடிவேல் ராவணன் 4 லட்சத்து 31 ஆயிரத்து 517 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். குறிப்பாக, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் மட்டும் தி.மு.க.வுக்கு 83 ஆயிரத்து 432 ஓட்டுகளும், அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.வுக்கு 74 ஆயிரத்து 819 வாக்குகளும் கிடைத்தன. ஆனால், இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு கூடுதலாக 38 ஆயிரத்து 947 வாக்குகள் கிடைத்துள்ளன. தி.மு.க. வேட்பாளருக்கு 14 ஆயிரத்து 590 வாக்குகள் குறைந்துள்ளன.

5 மாத இடைவெளியில், நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி மக்களின் மனநிலையில் இவ்வளவு பெரிய மாற்றம் ஏன்? என்ற விவாதம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், சட்டமன்ற தேர்தல் வேறு, பாராளுமன்ற தேர்தல் என்பது வேறு என்று அத்தொகுதி மக்கள் பிரித்து பார்த்து வாக்களித்து இருப்பதே இதன்மூலம் நிரூபணமாகியிருக்கிறது. ஆனால், காரணம் புரியாமல் அரசியல் கட்சிகள் இடையே குழப்பம் நீடித்து வருகிறது.
Tags:    

Similar News