செய்திகள்
கேஎஸ் அழகிரி

மேகதாது அணை கட்டாமல் மோடி தடுக்க வேண்டும்- கே.எஸ்.அழகிரி

Published On 2019-10-08 09:13 GMT   |   Update On 2019-10-08 09:13 GMT
தமிழகத்தின் நலன்கருதி மேகதாது அணை கட்டாமல் மோடி தடுக்க வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்றும், இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியிருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவிற்கு அருகில் 67.16 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட தண்ணீரை தேக்கி வைக்கவும், மின்சாரம் உற்பத்தி செய்யவும் ரூபாய் 5,912 கோடி செலவில் அணை கட்டுவதற்கான தீவிர முயற்சியில் கர்நாடக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இது 2018 பிப்ரவரி 16-ந் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிரானதாகும். கடந்த 1991 -ல் நடுவர்மன்றம் அமைக்கப்பட்டு 2007-ல் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டு, உச்சநீதிமன்றம் 177.25 டி.எம்.சி. நீரை தமிழ்நாட்டிற்கு வழங்க உத்தரவிட்டது. ஆனால், அந்த நீரைக் கூட உறுதியாக பெற முடியாத நிலையில் தமிழக அரசு இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் தீர்ப்பின் அடிப்படையில் மாதாமாதம் வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு வழங்குவதில்லை. இத்தகைய நிச்சயமற்ற அணுகுமுறையின் காரணமாக தமிழக விவசாயிகள் தங்கள் சாகுபடியை திட்டமிட முடியாத நிலையில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். மேகதாதுவில் அணை கட்டுவதன் மூலமாக தமிழகத்தின் உரிமையைப் பறிக்கின்ற முயற்சியாகவே கர்நாடக அரசின் நடவடிக்கை அமைந்திருக்கிறது.

தற்போது, மேகதாதுவில் அணை கட்டப்படுமேயானால் காவிரிப் படுகை வறண்ட பாலைவனமாக மாறுவதற்கு வழிகோலும் என எச்சரிக்க விரும்புகிறேன்.

இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு எடுக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அ.தி.மு.க. அரசுக்கு இருக்கிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து தீவிரமாக பரிசீலித்து தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க முன்வர வேண்டும்.

ஏற்கனவே, தமிழ்நாட்டின் உரிமைகளை பா.ஜ.க. அரசு பறிப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த முடியாத அவலநிலையில் இருக்கிறது. இத்தகைய நிலை தொடர்ந்து நீடிக்காமல் மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க, சமீபகாலமாக மிகமிக நெருக்கமான உறவு கொண்டிருக்கிற பிரதமர் நரேந்திர மோடியின் மூலம் தடுக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தை அணுகுவதன் மூலமாகவும் உரிய தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News