செய்திகள்
முத்தரசன்

குளங்கள் தூர்வாரும் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்- முத்தரசன்

Published On 2019-10-02 12:58 GMT   |   Update On 2019-10-02 12:58 GMT
ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டன என்பது குறித்து வெளிப்படையாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.

திருத்துறைப்பூண்டி:

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டில் 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று பிரதமரின் பொருளாதார ஆலோசகர் உள்பட பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் மக்கள் விரோத பொருளாதார கொள்கையை கண்டித்தும் , பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்குவதை கண்டித்தும் அக்டோபர் 10-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை இடதுசாரிகள் கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் பிரச்சாரம், போராட்டங்கள் நடைபெற உள்ளது. அக்டோபர் 13,14-ந் தேதிகளில் தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கங்களும் 16-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பேசும்போது, மராமத்து பணிகளுக்காக ஏற்கனவே ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2-வது கட்டமாக ரூ.328 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஏரிகள், ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏரி, குளங்களில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். பணம் ஒதுக்கப்பட்டது உண்மைதான். ஆனால் எந்த மாவட்டத்தில் எந்தெந்த ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டன என்பது குறித்து வெளிப்படையாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

காவல் துறையில் ரூ.350 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக வெளிவந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த ஊழல் நடக்க வாய்ப்பில்லை. எனவே இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி சட்டத்தின் முன் தண்டனை பெற்று தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News