செய்திகள்
கும்பகோணம் அருகே கீழக்கொட்டையூரில் பெய்த மழையால் வீடு இடிந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

தஞ்சை மாவட்டத்தில் 6-வது நாளாக கனமழை

Published On 2019-07-16 05:04 GMT   |   Update On 2019-07-16 06:02 GMT
தஞ்சை மாவட்டத்தில் 6-வது நாளாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 6 மாதமாக வெயில் சுட்டெரித்து வந்தது. வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் கடும் அவதியடைந்தனர். மழை பெய்யாதா? என ஏங்கி கொண்டிருந்தனர். விவசாயிகளும் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் கடந்த 6 நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, பூதலூர், வல்லம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலையும் வழக்கம் போல் தஞ்சையில் வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது. சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. ஆரம்பத்தில் லேசான அளவில் பெய்த மழை நேரம் செல்ல செல்ல கனமழையாக மாறியது. பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. தொடர்ந்து 2 மணி நேரம் மழை வெளுத்தி வாங்கியது.

நகரில் பல இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்களில் செல்வோர் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறே சென்றனர். சாலையில் இரண்டு அடி உயரத்திற்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு இடையே மிக மெதுவாக சென்றனர். மோட்டார் சைக்கிளில் சென்றவர்களால் கடும் மழையை கடந்து செல்ல முடியவில்லை. அவர்கள் மோட்டார் சைக்கிளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி விட்டு மழையை ரசித்தனர்.

இந்த மழைக்காக தானே 6 மாதங்களாக காத்திருந்தோம் என பொதுமக்கள் கூறினர். தொடர்ச்சியான மழையால் தஞ்சையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. இன்றும் மழை வருமா? என பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கும்பகோணம், கீழக் கொட்டையூர், கோடீஸ்வரன் கோவில் சன்னதி தெருவில் வசிப்பவர் வீராசாமி (63). இவரது வீட்டின் முன்புறம் பிரபாகரன் (35) என்பவர் தனது காரை நிறுத்தியிருந்தார்.

இந்நிலையில் இரவு பெய்த பலத்த மழையினால், வீராச்சாமியின் வீட்டின் முன் புறம் மேற்கூரை இடிந்து பிரபாகரனின் காரின் மீது விழுந்தது. இதில் சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பில் சேதம் ஏற்பட்டது. 

Tags:    

Similar News