செய்திகள்
பலத்த சூறைக்காற்று மற்றும் கடல் சீற்றமாக உள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நாட்டு படகுகள்.

கடல் சீற்றம்: 6-வது நாளாக நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Published On 2019-07-05 07:32 GMT   |   Update On 2019-07-05 07:32 GMT
அதிராம்பட்டினம் ஏரிபுறக்கரை பகுதியில் பலத்த சூறைக்காற்று மற்றும் கடல் சீற்றமாக உள்ளதால் இன்றும் 6-வது நாளாக 5 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

அதிராம்பட்டினம்:

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தம்பிக்கோட்டை மறவக்காடு கரையூர் தெரு காந்தி நகர் ஆறுமுக கிட்டங்கி தெரு ஏரிப்புறக்கரை கீழத் தோட்டம் வெளிவயல் புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவா சத்திரம் ஆகிய கடல் பகுதியில் தொடர்ந்து பலத்த சூறைக்காற்றும், கடல் சீற்றமும் இருந்து வருகிறது.

இன்றும் 6-வது நாளாக நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. தஞ்சை கடற் பகுதிகளாக தம்பிக்கோட்டை முதல் அண்ணாநகர் புதுத்தெரு வரையிலான பகுதிகள் உள்ளன. இதில் மொத்தம் 37 மீன்பிடித் தளங்களிலிருந்து மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்கின்றனர். இதில் 1000- க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள், 100 -க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், 100- க்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் மூலமாகவும் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 6 நாட்களாக தஞ்சை கடற்பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதோடு கடல் சீற்றமும் ஏற்பட்டு வருகிறது. இதனால் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றால் படகுகள் கவிழ்ந்து உயிர் சேதமும் பொருட்சேதமும் ஏற்படும் என்று அச்சத்துடன் பெரும்பாலான நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

கரையோரம் மீன் வலை வீசி பிடிக்கும் மீனவர்கள் மட்டுமே கடலுக்கு செல்வதால் உள்ளூர் மற்றும் வெளியூர் மார்க்கெட்டுகளுக்கு வரும் மீன்வரத்து குறைந்து மீன்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும் மீன் ஏற்றுமதி மற்றும் மீன்பிடித் தொழில் சார்ந்த தொழில்களான கருவாடு உற்பத்தி தொழில் மற்றும் கோழித் தீவனத்திற்கு பயன்படும் சங்காய உற்பத்தி தொழில், ஐஸ் உற்பத்தி தொழில் என அனைத்தும் முடங்கிப் போயுள்ளது. இதனால் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வேலை இல்லாமல் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கடலில் சீற்றமும் சூறைக்காற்றும் தொடரும் பட்சத்தில் மீனவர்கள் வேலை இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News