செய்திகள்

கோவையில் 2½ வயது பெண் குழந்தை கொலையில் வாலிபரிடம் போலீசார் விசாரணை

Published On 2019-06-25 04:51 GMT   |   Update On 2019-06-25 04:51 GMT
கோவையில் 2½ வயது பெண் குழந்தை கொலையில் வாலிபரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கரிய கவுண்டனூரை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 38). இவரது மனைவி காஞ்சனா (21). இவர்கள் சரவணம்பட்டி அருகே உள்ள விளாங்குறிச்சியில் குப்புராஜ் தோட்டத்தில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். இவர்களுக்கு அரும்பதா(2½) என்ற பெண் குழந்தை இருந்தது.

காஞ்சனா தனது குழந்தையுடன் பழனியப்பன் கவுண்டர் தோட்டத்தில் உள்ள தனது தாய் பேச்சியம்மாள் வீட்டிற்கு நேற்று முன்தினம் வந்தார். கனகராஜ் அன்னூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று இருந்தார். பேச்சியம்மாள் வீட்டிற்கு உறவினர்கள் 4 பேர் வந்து இருந்தனர். இரவு காஞ்சனா தனது குழந்தையுடன் வீட்டிற்குள் படுத்து தூங்கினார்.

அதிகாலை 2 மணியளவில் அரும்பதா அழுததால் குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு தூங்க வைத்தார். பின்னர் அதிகாலை 3.45 மணியளவில் காஞ்சனா எழுந்து பார்த்தார். அப்போது அருகில் படுத்து இருந்த குழந்தையை காணவில்லை. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த காஞ்சனா உறவினர்கள் உதவியுடன் அக்கம் பக்கத்தில் தேடினார்.

அப்போது வீட்டின் அருகே 500 மீட்டர் தொலைவில் உள்ள பாழடைந்த கிணற்றில் குழந்தை அரும்பதா கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கிணற்றில் இறங்கி குழந்தையை மீட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை அரும்பதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த தகவல் கிடைத்ததும் துணை கமி‌ஷனர் பாலாஜி சரவணன், உதவி கமி‌ஷனர் சோமசுந்தரம், பீளமேடு இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

குழந்தையின் தாய் காஞ்சனாவிடம் சம்பவத்தன்று வீட்டில் இருந்தவர் யார்-யார் என்று விசாரணை நடத்தினர். பின்னர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பீளமேடு போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

குழந்தையின் மர்ம சாவில் தாய் காஞ்சனா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சம்பவத்தன்று அவர்களது வீட்டில் தங்கி இருந்த உறவினர்கள் 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அன்னூரை சேர்ந்த பூபதி (26) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சம்பவம் நடந்த அன்று இரவு பூபதி கிணற்றின் அருகே வைத்து மது குடித்துள்ளார். மது போதையில் தனது லுங்கியை அங்கே விட்டு விட்டு வந்துள்ளார். எனவே அவரிடம் போலீசார் விடிய ,விடிய விசாரணை நடத்தினர்.

மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுமித் சரண் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட அரும்பதாவின் உடல் இன்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.


Tags:    

Similar News