செய்திகள்

8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டம்: 16 கிராமங்களில் நாளை விவசாயிகள் உண்ணாவிரதம்

Published On 2019-06-02 16:22 GMT   |   Update On 2019-06-02 16:22 GMT
சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிராக 16 கிராமங்களில் நாளை விவசாயிகள் உண்ணாவிரதம் நடத்த உள்ளனர்.

சேலம்:

சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டம் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் அமைக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணி நடந்தது.

இந்த திட்டத்திற்கு விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் 8 வழி சாலை திட்டத்தை ரத்து செய்து உத்தர விட்டனர். இதற்கிடையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்டத்தில் 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். நேற்று 2-வது நாளாக சேலம் அருகே உள்ள நாழிக்கல்பட்டி பகுதியில் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

அதன்பின்னர் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். கூட்டத்தில் 8 வழிச்சாலைக்கு ஆதரவாக மனு செய்த மத்திய அரசை கண்டித்து அறிக்கை வெளியிட்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை பாராட்டி நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் 8 வழிச் சாலையால் பாதிக்கப்படும் அனைத்து மாவட்ட விவசாயிகளை இணைத்து பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் நாளை 16 கிராமங்களில் உண்ணா விரதம் இருக்கவும் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து உழவர் உற்பத்தியாளர் பேரியக்க மாவட்ட செயலாளர் நாராயணன் கூறியதாவது:-

8 வழிச்சாலைக்கு மேல் முறையீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அயோத் தியாப்பட்டணம், குப்பனூர், நாழிக்கல்பட்டி, பாரப்பட்டி, உத்தமசோழபுரம் உள்ளிட்ட 16 பஞ்சாயத்துக்களிலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கறுப்புக்கொடி கட்டி நாளை உண்ணாவிரதம் நடத்த உள்ளனர். தொடர்ந்து நாங்கள் எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News