செய்திகள்

பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை

Published On 2019-05-14 12:19 GMT   |   Update On 2019-05-14 12:19 GMT
பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
திருப்பூர்:

திருப்பூர் கருவம்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 52). ஆட்டோ டிரைவர். இவருக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டார்.

மனைவி இறந்ததால் தன்னால் குழந்தைகளை கவனிக்க முடியவில்லை என்று கூறி, அலகுமலையில் உள்ள தனியார் விடுதியில் 3 பேரையும் சேர்த்தார்.அவ்வப்போது சென்று அவர்களை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ந்தேதி விடுதிக்கு சென்ற தந்தை, கோவிலுக்கு குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டும் என்று கூறி, விடுதியில் இருந்து தனது 3 குழந்தைகளையும் அழைத்து வந்தார். பின்னர் 2 நாட்கள் கழித்து மீண்டும் குழந்தைகளை விடுதியில் கொண்டு விட்டுள்ளார். அப்போது அவரின் 12 வயது மகள் அழுதபடியே இருந்தார்.

விடுதி நிர்வாகிகள், அந்த சிறுமியிடம் விசாரித்தனர். தங்களை அழைத்து சென்ற தந்தை திருப்பூர் காதர்பேட்டையில் சரக்கு ஆட்டோவில் மதுபோதையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார். அதிர்ச்சி அடைந்த விடுதி நிர்வாகிகள் உடனடியாக இதுகுறித்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், 2 மகன்கள் முன்னிலையில் தந்தையே தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தந்தையை கடந்த 13.2.2014- அன்று போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Tags:    

Similar News