செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்- புதிய அரசாணை வெளியிட தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

Published On 2019-03-15 07:50 GMT   |   Update On 2019-03-15 09:41 GMT
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை நீக்கி புதிய அரசாணை வெளியிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #PollachiCase #PollachiAbuseCase #HCMaduraiBench

மதுரை:

பொள்ளாச்சியைச் சேர்ந்த சில பெண்கள் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைத்து அரசாணை வெளியிடப்பட்டது. அதில், பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்தநிலையில் திருச்சியைச் சேர்ந்த இளமுகில், மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த சில வாரங்களாக பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்ட சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. தற்போது இந்த விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  

அதில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களும் இடம் பெற்றுள்ளன. சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவுவதாலும் அவர்களின் பெயர்கள் வழக்கு விசாரணையில் சேர்க்கப்பட்டுள்ளதாலும் பாதிக்கப்பட்ட பெண்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகி உள்ளது.


எனவே பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்களின் பெயர் விவரங்களையும், அவர்கள் தொடர்பான வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கி உத்தரவிட வேண்டுகிறேன்.

மேற்கண்டவாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு இன்று (15-ந் தேதி) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதி பதிகள் பொள்ளாச்சி சம்பவம் பெண்களின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கி உள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பலதரப்பட்டவர்களின் மனநிலையும் மாறும் என மனநல ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான அனைத்து வீடியோக்களையும், புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும்.

இணையதளம் தொடர்பான நன்மை, தீமைகளை குழந்தைகள் அறிந்து கொள்ளும் வகையில் பாடப்புத்தகங்களில் அரசு சேர்க்கலாம். பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்கள் அடங்கிய அரசாணையை ரத்து செய்து புதிய அரசாணையை வெளியிட வேண்டும்.

இதுபோன்ற கொடூர சம்பவங்கள் இனியும் நிகழாத வகையில் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர். #PollachiCase #PollachiAbuseCase #HCMaduraiBench
Tags:    

Similar News