செய்திகள்

மரக்காணம் பகுதியில் கனமழை: குளம் உடைந்து கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்தது

Published On 2018-11-22 14:02 GMT   |   Update On 2018-11-22 14:02 GMT
மரக்காணம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குளம் உடைந்து கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வீடுகளில் வசித்தவர்கள் முக்கிய பொருட்களை எடுத்து கொண்டு வெளியேறினர். #heavyrain

மரக்காணம்:

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மரக்காணம் பகுதியில் தொடர்ந்து 3 நாட்களாக பலத்த மழை கொட்டுகிறது. மரக்காணம், அனுமந்தை, வண்டிப்பாளையம் போன்ற பகுதிகளில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்யதது.

இன்று காலையும் மரக்காணம் பகுதியில் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

மரக்காணம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வண்டிப்பாளையம் கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரியகுளம் இன்று அதிகாலை நிரம்பியது.

குளத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் திடீரென்று குளத்தின் கரை உடைந்தது. இதனால் குளத்தில் இருந்த தண்ணீர் கரைபுரண்டோடி ஊருக்குள் புகுந்தது.

இதில் வண்டிப்பாளையம் கிராமத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் வீடுகளில் வசித்தவர்கள் முக்கிய பொருட்களை எடுத்து கொண்டு வெளியேறினர். 100-க்கும் மேற்பட்டவர்கள் வெளியேறி பாதுகாப்பான இடத்தில் தங்கி உள்ளனர்.

குளத்தின் கரை உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்த தகவல் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. உடனே மரக்காணம் தாசில்தார் தனலட்சுமி மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் போலீசார், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் குளத்தின் கரையை மணல் மூட்டைகள் மற்றும் பலகைகள் கொண்டு அடைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். #heavyrain

Tags:    

Similar News