செய்திகள்

பயங்கர வெள்ளத்தின் நடுவே தாமிரபரணி ஆற்றில் குதித்த வாலிபர் - வைரலாகும் புகைப்படம்

Published On 2018-08-16 11:39 GMT   |   Update On 2018-08-16 11:39 GMT
தாமிரபரணி ஆற்று பாலத்தின் மீது நின்று வாலிபர் ஒருவர் தண்ணீரில் குதிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை:

நெல்லை பகுதியில் உள்ள பெரும்பாலானவர்களின் செல்போன்களுக்கு இன்று ஒரு வீடியோ காட்சி வைரலாக பரவியது. அந்த வீடியோ காட்சியில் ஒரு இளைஞர் அரை டவுசர், பனியன் அணிந்து கொண்டு நெல்லை சந்திப்பு ஆற்றுப் பாலத்தில் நடந்து வந்து கைப்பிடி சுவர் அருகே நிற்கிறார். திடீரென்று அவர் கைப்பிடி சுவரில் ஏறி ஆற்றுக்குள் குதித்து தண்ணீரில் நீந்தி செல்கிறார்.

இந்த வீடியோ காட்சி பெரும்பாலான செல்போன்களுக்கு வைரலாக பரவி வருகிறது. வீடியோ காட்சியில் அந்த இளைஞர்கள் பேசுவதும் பதிவாகி உள்ளது. இளைஞர் குதித்த ஆற்றுப் பகுதியின் அருகே தான் புதிய பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. அதிர்ஷ்டவசமாக அந்த வாலிபர் உயிர் பிழைத்து நீந்தி சென்றுவிட்டார். அசம்பாவிதம் ஏதேனும் ஏற்பட்டால் பெரிய பிரச்சினையாகி இருக்கும்.

இளைஞர்கள் இது போல் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளார்கள்.

தற்போது நெல்லை சந்திப்பு போலீசார் இந்த வீடியோ காட்சி தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் யாரும் குதித்து விடாதபடி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News