செய்திகள்
கீழ்கட்டளை ஏரி பகுதியில் பனை விதைகளை தொல்.திருமாவளவன் விதைத்தார்.

1 லட்சம் பனை விதைகள் விதைக்க வேண்டும்- திருமாவளவன் வேண்டுகோள்

Published On 2018-08-16 06:48 GMT   |   Update On 2018-08-16 06:48 GMT
தமிழகம் முழுவதும் தனது பிறந்தநாளன்று ஒரு லட்சம் பனை விதைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விதைக்க வேண்டும் என்று திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். #Thirumavalavan
சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாளான ஆகஸ்ட் 17-ந்தேதி அன்று அக்கட்சியினர் தமிழர் எழுச்சி நாளாக கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்ததை தொடர்ந்து தனது பிறந்த நாளை கொண்டாடவில்லை என அறிவித்து இருந்தார்.

எனினும் அவரது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பனை விதைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விதைக்கின்றனர். பனை மரமானது தமிழர்களின் பாரம்பரியமான கற்பக விருட்சம் ஆகும்.

மாறி வரும் கால சூழலில் பனை மரங்கள் அழிந்து வருகின்றன. செங்கல் சூளைகளுக்காக கோடிகணக்கான பனைமரங்கள் அழிக்கப்பட்டு விட்டன.

இந்த நிலையில் மீண்டும் கோடிக்கணக்கான பனை மரங்களை வளர்ப்பது என்ற அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முதல் தவணையாக ஒரு லட்சம் பனை விதைகளை விதைக்கிறார்கள்.

கடந்த 11-ந்தேதி முதல் தங்களது தொண்டர்களுடன் திருமாவளவன் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பனை விதைகளை சேகரித்தார். 3 நாட்களில் சென்னையில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேலான விதைகளை சேகரித்துள்ளனர். இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் சேகரித்து பதப்படுத்தி உள்ளனர்.

தொல்.திருமாவளவன் கடந்த 2 நாட்களில் கீழ்கட்டளை, திருநீர்மலை, செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளில் 500 பனை விதைகளை விதைத்துள்ளார்.

அவரது பிறந்த நாளான நாளை (17-ந்தேதி) அவரது சொந்த கிராமத்தில் ஆயிரம் விதைகளை விதைக்க இருக்கிறார். பனை விதைகளை விதைக்கும் பணியை ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக திருமாவளவன் மாற்றி இருக்கிறார்.

பனம் பழங்களை சேகரிப்பது, விதைகளை நேர்த்தி செய்வது போன்ற நடவடிக்கைகளில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஈடுபட்டு வருவதை அவர்களின் சமூக வலைதளங்களில் காணப்படுகிறது.

தனது பிறந்த நாளை இயற்கை வளம் காப்பதற்கான பணிகளை செய்யும் நாளாக திருமாவளவன் மாற்றி இருப்பது பாராட்டத்தக்கது.

பிறந்த நாளையொட்டி நள்ளிரவில் கேக் வெட்டுவது, இனிப்பு வழங்குவது, பட்டாசு வெடிப்பது, மேளதாளம் கொட்டுவது போன்ற நடவடிக்கையில் தொண்டர் கள் ஈடுபடக்கூடாது என அறிவித்து இருக்கிறார். குழந்தைகளுக்கு இனிப்பு வழங்க வேண்டும் என்றால் பனைவெல்லத்தை மட்டுமே வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. #Thirumavalavan
Tags:    

Similar News