செய்திகள்

அடக்குமுறை மூலம் மக்கள் போராட்டங்களை அரசு முடக்க கூடாது: திருநாவுக்கரசர் பேட்டி

Published On 2018-07-05 11:06 GMT   |   Update On 2018-07-05 11:06 GMT
மக்களின் உணர்வுப் பூர்வமான போராட்டங்களை அரசு அடக்கு முறையால் முடக்க கூடாது என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார். #thirunavukkarasar #tngovt

திண்டுக்கல்:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் திருநாவுக்கரசர் திண்டுக்கல் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களின் உணர்வுகளை மத்திய மாநில அரசுகள் புரிந்து கொள்ளவில்லை. காவல் துறையை கொண்டு அடக்கு முறையை ஏவி விட்டதால் 13 பேர் பலியாகி உள்ளனர். முன்னரே மக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி ஆலையை மூடியிருந்தால் உயிர் பலி ஏற்பட்டு இருக்காது.

தற்போது 8 வழிச்சாலை பிரச்சினையிலும் அதே போன்ற நிலையைத்தான் தமிழக அரசு கையாண்டு வருகிறது. போராட்டம் நடத்துபவர்கள் மீது வழக்கு பதிவு, கைது, தடியடி, போலீசாரை கொண்டு மிரட்டல் போன்றவற்றை எடுத்து வருகிறது. மக்கள் எதிர்க்கும் எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்த நினைக்க கூடாது. மக்களின் எதிர்ப்பை மீறி செயல்படுத்தும் திட்டம் வெற்றி பெறாது.

ஆளுனரை எதிர்த்தால் 7 ஆண்டு, முதல்-அமைச்சரை எதிர்த்தால் 6 ஆண்டு, பாராளு மன்ற உறுப்பினரை எதிர்த்தால் 3 ஆண்டு, சட்ட மன்ற உறுப்பினரை எதிர்த்தால் 1 ஆண்டு என மக்களை மிரட்டி தமிழக அரசு ஆட்சி நடத்துகிறது. அரசு தவறு செய்தால் அதனை சுட்டிக் காட்டி போராட்டம் நடத்துவதுதான் எதிர் கட்சிகள் மற்றும் மக்களின் வேலை. ஆனால் குரல் கொடுத்தாலே அவர்களின் குரல் வளையை நெரிக்கும் பாசிச போக்கை அரசு கையாளுகிறது. இந்த சர்வாதிகார போக்கை கைவிட்டு ஜனநாயக ரீதியில் அரசை வழி நடத்த வேண்டும்.

உச்ச நீதிமன்றம் நேற்று வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு டெல்லி மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு மட்டும் பொருந்துவது கிடையாது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு புதுச்சேரிக்கு பொருந்தாது என கிரண்பெடி பேசி வருகிறார். அது போன்ற நிலையில்தான் தமிழக ஆளுனரும் நடந்து வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான் அரசை வழி நடத்த வேண்டும். ஆளுனருக்கு அந்த அதிகாரம் கிடையாது.

பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது மோடியின் விருப்பமாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் இது சாத்தியமல்ல என்று தேர்தல் கமி‌ஷனே கூறியுள்ளது. தன்னிச்சையான இந்த முடிவை கைவிட்டு காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளை அழைத்து பேசி மத்திய அரசு ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும். காவிரி மேலாண்மை வாரிய பிரச்சினையில் தனது மாநிலத்துக்கு ஆதரவான நிலைப் பாட்டையே குமாரசாமி எடுத்து வருகிறார். தமிழகத்துக்கு உரிய தண்ணீரைப் பெற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அப்துல்கனிராஜா, மாநகர தலைவர் சொக்கலிங்கம், துணைத்தலைவர் ஆறுமுகம், நிஜகண்ணன், நிர்வாகிகள் வக்கீல்குப்புசாமி, கணேசன், ஹைருல்லா மற்றும் பலர் உடன் இருந்தனர். #thirunavukkarasar #tngovt

Tags:    

Similar News