செய்திகள்

நெல்லை- தூத்துக்குடியில் 6 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் இன்று கடலுக்கு சென்றனர்

Published On 2018-03-16 04:27 GMT   |   Update On 2018-03-16 04:27 GMT
நெல்லை- தூத்துக்குடி மாவட்டத்தில் புயல் ஆபத்து நீங்கியதை அடுத்து 6 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் இன்று அதிகாலையில் கடலுக்கு சென்றனர்.
தூத்துக்குடி:

இந்திய பெருங்கடலில் மாலத்தீவு மற்றும் குமரி இடையே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்தது. தூத்துக்குடியில் வரலாறு காணாத மழை பெய்தது. குற்றாலம் அருவிகளில் வெள்ளம் கொட்டியது.

நெல்லை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரித்தது. கனமழையை தொடர்ந்து மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன்படி கடந்த 6 நாட்களாக நெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.

இந்நிலையில் தென் கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த புயல் சின்னம் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் லட்சத்தீவு நோக்கி நகர்ந்து நேற்று காலை புயல் சின்னம் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலில் பரவி உள்ளது.

இதனால் புயல் ஆபத்து நீங்கியதை அடுத்து 6 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் இன்று அதிகாலையில் கடலுக்கு சென்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 500 நாட்டுப் படகுகளும், 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன.

இதைப்போல் நெல்லை மாவட்டத்தில் உவரி, கூட்டப்பனை, இடிந்தகரை, கூத்தங்குளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்களும் இன்று கடலுக்கு சென்றனர். #Tamilnews
Tags:    

Similar News