செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருகே வாய்க்காலில் முழ்கி 2 மாணவர்கள் பலி

Published On 2018-02-18 13:32 GMT   |   Update On 2018-02-18 13:32 GMT
திருவெண்ணைநல்லூர் அருகே 2 மாணவர்கள் வாய்க்காலில் மூழ்கி பலியான சம்பவத்தால் கொத்தனூர் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

திருவெண்ணைநல்லூர்:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கொத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் பாலாஜி (வயது 7). இவன் சரவணபாக்கம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

அதே பகுதியை சேர்ந்த சின்னதம்பி என்பவரது மகன் கிரி (9). இவனும் அதே பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

இன்று பள்ளி விடுமுறை என்பதால் பாலாஜியும், கிரியும் சேர்ந்து கொத்தனூர் பகுதியில் உள்ள வாய்க்காலுக்கு குளிக்க சென்றனர். அவர்கள் அங்கு குளித்து கொண்டிருந்த போது திடீரென வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக வந்தது. உடனே அவர்கள் நீந்தி கரைக்கு வர முயன்றனர்.

தண்ணீர் அதிகமாக வந்ததால் அவர்களால் வரமுடியவில்லை. சிறிது நேரத்தில் பாலாஜியும், கிரியும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

வாய்க்காலில் குளிக்க சென்றவர்கள் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் சிறுவர்களை வாய்க்கால் பகுதியில் தேடினர்.

அப்போது பாலாஜி, கிரி ஆகியோரின் உடல்கள் வாய்க்கால் கரையோரம் ஒதுங்கி கிடந்தது. அவர்களின் உடலை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர்.

இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாய்க்காலில் மூழ்கி பலியான 2 மாணவர்களின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

2 மாணவர்கள் வாய்க்காலில் மூழ்கி பலியான சம்பவத்தால் கொத்தனூர் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. #tamilnews

Tags:    

Similar News