செய்திகள்

வங்காளதேசத்தில் இறந்த மகளின் உடலை இந்தியா கொண்டுவர பெற்றோர் கண்ணீர் மனு

Published On 2018-02-17 12:45 GMT   |   Update On 2018-02-17 12:45 GMT
வங்காளதேசத்தில் மர்மமான முறையில் இறந்த மகளின் உடலை இந்தியா கொண்டு வர கோரி சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங்கிற்கு பெற்றோர் மனு அனுப்பியுள்ளனர்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் அவிநாசி, வேலாயுதம் பாளையத்தைச் சேர்ந்த முருகானந்தம் மகள் பூரணாதேவி (வயது 19). பனியன் தொழிலாளி.

இவர் கடந்த 2016-ம் ஆண்டு கம்பெனியில் உடன் வேலை செய்த வங்காள தேசத்தை சேர்ந்த ரிமுஷேக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, அங்கு சென்று விட்டார்.

இந்நிலையில், கடந்த 9-ம் தேதி அவர் உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாக ரிமுஷேக், அவினாசிபாளையத்தில் உள்ள முருகானந்தம் குடும்பத்துக்கு செல்போன் மூலம் தகவல் கூறினார்.

அதிர்ச்சியடைந்த, முருகானந்தம், இது குறித்து விசாரித்து உண்மை நிலை கண்டறிய வேண்டும் என்று திருப்பூர் எஸ்.பி. உமாவிடம் புகார் அளித்தார். விசாரணையில் ரிமுஷேக் போதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் பூரணாதேவியை வேலைக்கு அனுப்பி கொடுமைப்படுத்தியுள்ளார். தினமும், அவரை அடித்து உதைத்துள்ளார்.

கடந்த 9-ம் தேதி, அவரது அலறல் சத்தம் பக்கத்து வீட்டுக்கு கேட்டுள்ளது. அதன் பின்னர் தான், பூரணாதேவி மர்மமான முறையில் இறந்துள்ளார். அவர் தற்கொலை செய்துக் கொண்டார் எனக்கூறி, கணவன் ரிமுஷேக் மற்றும் குடும்பத்தினர் பிணத்தை புதைக்க முயன்றனர்.

ஆனால், வங்காள தேச போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் சடலத்தை பறிமுதல் செய்தனர். அங்குள்ள ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் உண்மை நிலை தெரியவரும்.

இது குறித்து அவிநாசி டி.எஸ்.பி., வளவன் கூறும்போது, ரிமுஷேக் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர். ஆனால் தற்போது வங்காள தேசத்தில் வசித்து வருகிறார். பூரணாதேவி விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து, ரிமுஷேக்கிடம் விசாரித்தால் மட்டுமே உண்மை தெரியவரும்.

நாடு கடந்த பிரச்சினை என்பதால் வங்கதேச தூதரகம் மூலம் இதை அணுக வேண்டியுள்ளது. இரண்டொரு நாளில், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

இந்நிலையில் பூரணாதேவியின் பெற்றோர் இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மாசுவராஜ், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் மகள் காதலனோடு வங்களாதேசம் சென்று விட்டார். இந்நிலையில் எனது மகள் இறந்து விட்டதாகவும், உடலை வங்களாதேச போலீசார் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் போலீசார் கூறினர்.

மகளின் முகத்தை நாங்கள் கடைசியாக பார்க்க வேண்டும். இது தவிர அவர் பிறந்த மண்ணில் அவரது உடலை புதைக்க வேண்டும். ஏழ்மை நிலையில் உள்ள நாங்கள் வங்களாதேசம் செல்லும் அளவிற்கும், அவரது உடலை சொந்த ஊர் கொண்டு வரும் அளவுக்கும் வசதியில்லை.

எனவே எங்கள் மகளின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரவும், அவரது திடீர் மரணம் குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைசியாக மகளின் முகத்தை பார்க்க வாய்ப்பு தருங்கள். 

இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது. #tamilnews

Tags:    

Similar News