search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெற்றோர் மனு"

    • தீபமணி துபாய் நிறுவனத்தின் மூலம் தாய்லாந்து நாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
    • சட்டத்திற்கு புறம்பான வேலைகளை செய்யச் சொல்லி வருவதாகவும் எனது மகன் தீபமணி வீடியோ கால்மூலம் தெரிவித்து உள்ளார்.

    காரைக்கால்:

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாசுப்பிரமணியன். அவரது மனைவி காத்தம்மாள். இந்த தம்பதியினர் காரைக்கல் கலெக்டர் முகம்மது மன்சூரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தனர். அதில் கூறி இருப்பதாவது:-

    எங்களது மகன் தீபமணி (வயது 30). ஏரோநாட்டிக்கல் என்ஜினியர் படிப்பை முடித்து, கடந்த 9 மாதங்களுக்கு முன்பாக துபாய்க்கு வேலைக்கு செல்வதாக வீட்டில் இருந்து சென்றார்.

    அதன்பின்னர், துபாய் நிறுவனத்தின் மூலம் தாய்லாந்து நாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். தாய்லாந்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது, இவருடன் சேர்த்து 30-க்கும் மேற்பட்ட இந்திய இளைஞர்களை மர்ம கும்பல் மியான்மர் நாட்டிற்கு கடத்திச் சென்று உள்ளனர். அங்கு படிப்புக்குரிய வேலை கொடுக்காமல் சட்டத்துக்கு புறம்பான வேலையை கொடுத்து உள்ளனர். அங்கிருந்து சொந்த ஊருக்கு வரவேண்டும் என்றால் ரூ. 49 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

    மேலும் துப்பாக்கி முனையில், அடித்து, உதைத்து அதிக நேரம் கடுமையான வேலை வாங்கி சித்ரவதை செய்து உள்ளனர். சட்டத்திற்கு புறம்பான வேலைகளை செய்யச் சொல்லி வருவதாகவும் எனது மகன் தீபமணி வீடியோ கால்மூலம் தெரிவித்து உள்ளார்.

    எனவே மியான்மர் நாட்டில் தவிக்கும் எங்களது மகனை மீட்டு தரவேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    • கடந்த மார்ச் மாதம் அவளது பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    • கடந்த 3 மாதங்களாக நெல்லை அரசு மருத்துவமனையில் தங்கி இருந்து மகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பருத்திபாடு நடுத்தெருவை சேர்ந்தவர் மகாராஜன். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். மகன் என்ஜினீயரிங் படித்து வருகிறான். மூத்த மகள் ஆசிரியர் பயிற்சி படித்து வருகிறார். எனது 2-வது மகள் நல்லத்தாய் மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறாள்.

    கடந்த மார்ச் மாதம் அவளது பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. எனது மகள் தடுப்பூசி செலுத்த விருப்பமில்லை என கூறிய நிலையிலும், 10-ம் வகுப்பு தேர்வு எழுத தடுப்பூசி கட்டாயம் எனக்கூறி ஆசிரியர்கள் அவளை கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ள செய்துள்ளனர்.

    அதன்பின்னர் எனது மகளுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பக்க விளைவுகளால் எனது மகள் அடையாளம் தெரியாத நிலையில் ஆபத்தான கட்டத்திற்கு போய்விட்டாள்.

    இதைத்தொடர்ந்து பல்வேறு தனியார் மருத்துவமனையில் நல்லத்தாய்க்கு சிகிச்சை அளித்தோம். ஆனாலும் குணமாகவில்லை. ஒரு கட்டத்தில் என்னிடம் பணம் இல்லாததால், நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தேன்.

    அங்கு கடந்த ஜூன் மாதம் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் காசநோய் பாதிப்பு உள்ளதாக தெரிவித்தனர். உடனே ஜூலை மாதம் அவளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் சற்று உடல்நிலை தேறிய நிலையில், தற்போது மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சுயநினைவு இழந்துவிட்டார்.

    கடந்த 3 மாதங்களாக நெல்லை அரசு மருத்துவமனையில் தங்கி இருந்து மகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். எங்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் இல்லை. எனவே நல்லத்தாய்க்கு உயர்தர சிகிச்சை அளிக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இதுதொடர்பாக மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் ரவிச்சந்திரன் கூறுகையில், மாணவிக்கு டியூபர்குளோசிஸ் மெனிங்க்டிஸ் என்ற ஒரு வகை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது சிறுவயதில் இருந்தே மாணவிக்கு இருந்திருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தியதால் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.

    சமீபத்தில் மாணவியின் உடலில் ரத்தம் சீராக செல்ல மூளையில் இருந்து இதயத்திற்கு ஸ்டெண்ட் வைத்தோம். அதன்பின்னர் மாணவி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. தற்போது அது சரிவர வேலை செய்யவில்லை என்பதால் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக கலெக்டர் விஷ்ணுவும் எங்களிடம் பேசினார். எங்களுடைய முழு முயற்சியையும் செலுத்தி மாணவிக்கு சிகிச்சை அளித்து வருகிறோம் என்றார்.

    ×