செய்திகள்

கோவில்களில் கடைகளை அகற்றக் கோரி மனு: அறநிலையத்துறை ஆணையர் பதில் அளிக்க நோட்டீசு

Published On 2018-02-12 10:38 GMT   |   Update On 2018-02-12 10:38 GMT
கோவில்களில் கடைகளை அகற்றக் கோரி மனு தொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில் கூறி இருந்ததாவது:-

தமிழகத்தின் அனைத்து கோவில்களின் உள்ளும், கடைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களிலும் அதன் பழமை மற்றும் வரலாற்று சிறப்பை குறைக்கும் வகையில், அதிகாரிகளால் சுய லாபத்திற்காக கடைகள் வைக்கப்பட்டுள்ளன.

அவற்றை இனிவரும் காலங்களிலாவது பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். கேரளாவின் பத்மநாப கோவில், தாஜ்மகால் போன்ற பகுதிகளில் லாப நோக்கில் அல்லாமல், கடைபிடிக்கப்படும் சில நடவடிக்கைகளே, அவற்றின் பழமையும் சிறப்பும் இன்றளவும் குறையாமல் இருக்க காரணம்.

ஆகவே, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை சிவன் கோயிலின் உள்பகுதியில் இந்து கலாச்சாரம் மற்றும் தர்ம அடிப்படையிலான பொருட்களை விற்கும் கடைகளைத் தவிர பிற அனைத்து வகையான கடைகளுக்கும் தடை விதிக்க வேண்டும். அந்த கடைகளும் பழமை மற்றும் சிறப்பை குறைக்காத வகையில் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

கோவிலின் அனைத்து முக்கிய பகுதிகள், கோவிலின் உள் மற்றும் வெளி பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். கோவிலின் முக்கிய பகுதிகளில் காலணி அணியாமல் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். இதனால் காவல்துறையினரின் பளு சற்று குறையும்.

கோவில்களின் வெளிப்பகுதியில் நடத்தப்படும் கடைகளும் இந்துக்களின் உணர்வை புண்படுத்தாத வகையில் செயல்பட வேண்டும். ஒவ்வொரு கோவிலிலும், இலவசமாக காலணிகளை வைப்பதற்கான இடத்தை அமைக்க உத்தரவிட வேண்டும்.

மிகக்குறைந்த அளவில் கூட கட்டணம் வசூலிக்க கூடாது. 2 மற்றும் 4 சக்கர வாகனங்களை நிறுத்த கோவில் நிர்வாக அதிகாரிகள் உரிய வசதிகளை செய்து தர வேண்டும், அவற்றை முறையாக கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும். கோவிலுக்குள் உண்ணா விரதம் இருக்கவோ, ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவோ வேறெந்த வடிவிலும் போராடவோ அனுமதிக்க கூடாது. கோவிலுக்குள் உணவு பதார்த்தங்களை விற்கும் கடைகளையும் அனுமதிக்க கூடாது என உத்தரவிட வேண்டும்.

இந்த கோரிக்கைகளை முன் வைத்து, அனைத்து அதிகாரிகளுக்கும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவே, கோவில்களின் பழமையையும், சிறப்பையும் பாதுகாக்க எனது மனுவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று நீதிபதிகள் சத்திய நாராயணன், ஹேமலதா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த மனு குறித்து இந்து சமய அறநிலைய துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு மார்ச் 12-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர். #tamilnews
Tags:    

Similar News