search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோட்டீசு"

    ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் 4வது நாளாக ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 8 லட்சம் பேருக்கு ‘நோட்டீசு’ அனுப்பப்பட்டுள்ளது. #JactoGeo #GovtStaff
    சென்னை:

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்-ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடந்து வருகிறது.

    கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 4-வது நாளாக நீடித்தது.

    தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சுமார் 13 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் 8 லட்சம் பேர் காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் வழக்கமான பணிகள் முடங்கியுள்ளன.

    தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களில் தொடக்கப்பள்ளிகள் கடந்த 4 நாட்களாக மூடப்பட்டுள்ளன. நேற்றும், நேற்று முன்தினமும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைத்து மாவட்டங்களிலும் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    போராட்டத்தை கைவிடுமாறு ஜாக்டோ-ஜியோவுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பல தடவை கோரிக்கை விடுத்தார். ஆனால் அது ஏற்கப்படவில்லை. இந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்றுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 25-ந்தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

    இதுபற்றி முடிவு எடுக்க ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை சென்னை திருவல்லிக்கேணியில் நடந்தது. கோர்ட்டு உத்தரவை ஏற்று வேலைக்கு திரும்புவதா? வேண்டாமா? என்று கூட்டத்தில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.

    முடிவில் தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ள 9 அம்ச கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற போராட்டத்தைத் தொடர்வது என்று தீர்மானிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாடு முழுவதும் இன்றும் 4-வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத் தொடர்ந்து காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஜாக்டோ-ஜியோ போராட்டம் தொடங்கிய 22-ந்தேதி முதலே பணிக்கு வராதவர்கள் யார்-யார்? என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சட்டப்பிரிவு 17-பி-ன் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.

    பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவின் பேரில், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், பள்ளிகள் வாரியாக நோட்டீஸ் அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உரிய விளக்கம் அளிக்குமாறு அனுப்பப்படும் நோட்டீசுகளை சில இடங்களில் ஆசிரியர்கள் வாங்க மறுத்ததாக தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர்களின் வீடுகளில் நோட்டீசை ஒட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து பணிக்கு வராத ஆசிரியர்களின் வீடுகளில் நோட்டீசை ஒட்டும் பணி நேற்று இரவு தொடங்கி விடிய, விடிய நடந்தது. இன்றும் நோட்டீசு ஒட்டப்பட்டு வருகிறது. கிராம நிர்வாக அதிகாரிகள் துணையுடன் இந்த பணி நடந்து வருகிறது.

    இதன் அடிப்படையில் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பற்றிய முழு விபரமும் இன்று மாலைக்குள் தொகுக்கப்பட உள்ளது. அந்த பட்டியலை கொண்டு நாளை (சனிக்கிழமை) முதல் அதிரடி நடவடிக்கைகள் பாய உள்ளது. சட்ட பிரிவுகளின் துணைகொண்டு பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.

    குறிப்பாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு “நோ ஒர்க், நோபே” என்ற அடிப்படையில் சம்பளத்தை பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எத்தனை நாட்களுக்கு வேலைக்கு வரவில்லையோ, அத்தனை நாட்களுக்கு சம்பளத்தை வழங்கக் கூடாது என்பதில் அரசு தீவிரமாக உள்ளது.

    இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்து நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை வெளியிட்டுள்ளார்.

    அதில் பள்ளி பெற்றோர்-ஆசிரியர் சங்கம் மூலமாக பள்ளிகளுக்கு அருகில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை தேர்வு செய்து பள்ளிக்கூடங்களை தங்கு தடையின்றி நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் அங்கேரிபாளையம் அரசு பள்ளியில் ஆசிரியர்கள் வேலைக்கு வராததால் தற்காலிக ஆசிரியை மூலம் பாடம் நடத்தப்பட்டது

    அப்படி தேர்வு செய்யப்படும் தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.7,500 சம்பளம் வழங்கலாம் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அரசாணையைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. 3 நாட்களுக்குள் தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு பணியை முடிக்கும்படி பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களிடம் கூறப்பட்டுள்ளது.

    பெற்றோர், ஆசிரியர் சங்கம் இல்லாத பள்ளிகளில் அருகில் உள்ள பள்ளிகளில் இயங்கும் சங்கங்கள் மூலம் தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இப்படி தேர்வு செய்யப்படும் தற்காலிக ஆசிரியர்கள் 28-ந்தேதி முதல் பள்ளிகளில் பணி அமர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 28-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் தற்காலிக ஆசிரியர்கள் உதவியுடன் தொடக்கப் பள்ளிகளைத் திறந்து பாடம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டில் ஜாக்டோ-ஜியோ தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. அன்றைய தினம் மதுரை ஐகோர்ட்டு புதிய உத்தரவுகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஓரிரு நாட்களில் முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #JactoGeo #GovtStaff
    குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் தலைமை செயலாளர், டிஜிபி டிகே ராஜேந்திரன், சசிகலாவுக்கு நோட்டீசு அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. #GutkhaScam #Sasikala #RamaMohanaRao
    மதுரை:

    மதுரை மீனாம்பாள்புரத்தை சேர்ந்த கதிரேசன், மதுரை ஐகோர்ட்டில் பொது நல மனுத்தாக்கல் செய்தார். அதில் கூறி இருந்ததாவது:-

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பொருட்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்தது தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரி அதிகாரிகள் சென்னையில் உள்ள ஒரு குடோனில் சோதனை செய்தனர்.

    அப்போது பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கிருந்து ஒரு டைரியும் கைப்பற்றப்பட்டது.

    அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய லஞ்சம் பெற்றவர்களின் பட்டியல் இருந்ததாக தகவல்கள் வந்தது.

    அந்த பட்டியலில் தமிழக அமைச்சர், சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் டி.கே. ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து விசாரித்து சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை தண்டிக்க உத்தரவிட வேண்டும் என்று கடந்த ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, குட்கா ஊழல் குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு கடந்த 28.7.2017 அன்று உத்தரவிட்டது.

    இதேபோல சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், குட்கா ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் குட்கா ஊழல் பற்றிய விசாரணையை சி.பி.ஐ. தற்போது மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் குட்கா ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார். அவரது பணிக்காலம் முடிந்தபிறகு 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து தமிழக அரசு 30.6.2017 அன்று அரசாணை பிறப்பித்து உள்ளது.

    அவருக்கு பதவி நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்தின் காரணமாக, குட்கா ஊழல் பிரச்சினையில் அவர் மீது குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படவில்லை என்று அப்போதைய தலைமை செயலாளர் ராமமோகனராவ் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

    தற்போது போயஸ் கார்டனில் சசிகலாவின் அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் குட்கா ஊழல் குறித்து வருமான வரித்துறையினரின் அறிக்கை கைப்பற்றப்பட்டு உள்ளது.

    அதில் தற்போதைய டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பெயர் இடம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. எனவே அவரின் பதவியை சட்டவிரோதமாக நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக, முறைகேடுகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் டி.கே.ராஜேந்திரனின் டி.ஜி.பி. பதவி நீட்டிப்பை ரத்து செய்யவேண்டும். இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.



    வழக்கு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய பணியாளர் தேர்வாணையம், தமிழக அரசின் தலைமை செயலகம், முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ், டி.ஜி.பி., வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அலுவலக அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் இந்த வழக்கில் சசிகலாவை எதிர் மனுதாரராக சேர்த்து அவருக்கும் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜனவரி மாதம் 2-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். #GutkhaScam #Sasikala #RamaMohanaRao
     
    திருப்பதி ஏழுமலையானின் பல கோடி மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் மாயமானது தொடர்பாக முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர், விஜயசாய் எம்.பி. ஆகியோருக்கு திருப்பதி தேவஸ்தானம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தலைமை அர்ச்சகராக இருந்தவர் ரமண தீட்சிதர். இவர் திருப்பதி கோவிலில் ஆகம விதிகளுக்குட்பட்டு தேவஸ்தான அதிகாரிகள் நியமனம் நடக்கவில்லை, பூஜைகள் சரியாக செய்யவில்லை என்றும் ஏழுமலையானின் பல கோடி மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் காணவில்லை என்றும் பல்வேறு புகார்கள் கூறினார்.

    இதற்கிடையே திருப்பதி கோவிலில் அர்ச்சகருக்கு ஓய்வு வயதை 65 ஆக தேவஸ்தானம் நிர்ணயித்தது. அதன்படி தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதரருக்கு கட்டாய ஓய்வு அளித்தது திருப்பதி தேவஸ்தானம் மீது புகார்கள் கூறியதால் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டதாக ரமண தீட்சிதர் கூறினார்.

    இவ்விவகாரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. விஜயசாய் ரெட்டியும் புகார் ஒன்றை கூறினார்.

    அவர் கூறும் போது, திருமலையில் பிரசாதங்கள் தயாரிக்கும் இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த நகைகளை தேவஸ்தானத்தினர் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் ஒப்படைத்து விட்டதாக கூறினார்.

    இந்த நிலையில் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர், விஜயசாய் எம்.பி. ஆகியோருக்கு திருப்பதி தேவஸ்தானம் நோட்டீஸ் அனுப்பியது. அதில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும் பக்தர்களை குழப்பும் விதமாக புண்படும் படியும் அறிக்கை வெளியிட்டதாகவும் கூறி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்துக்கு எதிரான வருமான வரித்துறை நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
    சென்னை:

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் 2011-12-ம் ஆண்டிற்கான வருமான வரிக்கணக்கை மறு ஆய்வு செய்வதற்காக கணக்கு விவரங்களுடன் நேரில் ஆஜராகும்படி வருமான வரித்துறை கடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

    ஆனால், வரி கணக்கை மீண்டும் கணக்கிடுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்தார். அதில், தான் முறையாக வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்திருப்பதால், வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ்களை ரத்து செய்து உத்தரவிடவேண்டும் எனக் கூறியிருந்தார்.



    இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிதம்பரத்துக்கு எதிரான வருமான வரித்துறை நோட்டீசுக்கு நீதிமன்றம்  தடை விதித்தது. இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரையில், நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    2009-2010, 2010-11ம் ஆண்டுகளுக்கான வரிக்கணக்கை மறு ஆய்வு செய்வது தொடர்பாக அனுப்பிய நோட்டீஸ்களை ஏற்கனவே உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
    போக்குவரத்து கழக ஊழியர்கள் வருகிற 19-ந் தேதி அல்லது அதற்கு பிறகு ஏதாவது ஒரு தேதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அதிகாரிகளிடம் நோட்டீசு வழங்கியுள்ளனர். #transportworkers #strike
    சென்னை:

    சென்னை, பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க அலுவலகத்தில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் நேற்று நடந்தது. தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். பொருளாளர் நடராஜன், தொழிற்சங்க நிர்வாகிகள் ஆறுமுகநயினார், சுப்பிரமணியன், வேணுராம், திருமலைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், அரசு போக்குவரத்து கழகங்களை சீரமைக்க நிதி வழங்குவதோடு வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத்தை அரசு வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைவதுடன், சமனற்ற ஊதிய பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். ஊழியர்களுக்கு நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வின்போதே ஓய்வுகால பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த ஜனவரி மாதம் இதுவரை இல்லாத அளவு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதால் 30 லட்சம் பயணிகள் வேறுவிதமான பயண முறைக்கு மாறிவிட்டனர். சட்டவிரோதமான ஷேர்ஆட்டோக்கள், ஆம்னி பஸ்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால் போக்குவரத்து கழகங்கள் கடும்போட்டியை சமாளிக்க வேண்டியுள்ளது. எனவே பேருந்து கட்டணத்தை முறைப்படுத்தி பொதுபோக்குவரத்தை விரிவுபடுத்த வேண்டும்.



    போக்குவரத்து கழகங்களில் 20 ஆயிரம் காலி பணியிடங்கள் காரணமாக 2 ஆயிரம் பேருந்துகளை இயக்க முடியவில்லை. சென்னையில் 450 பேருந்துகள் இயக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பஸ் கட்டண உயர்வுக்கு முன்பு ரூ.8 கோடியாக இருந்த நஷ்டம் தற்போது ரு.9 கோடியாக உயர்ந்துள்ளது.

    எனவே போக்குவரத்து கழகங்களை பாதுகாக்க வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி போக்குவரத்து துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீசு அளித்துள்ளோம். அரசின் நடவடிக்கையை பொறுத்து 19-ந் தேதி அல்லது அதற்கு பிறகு ஏதாவது ஒரு தேதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏற்கனவே சம்பள உயர்வு கோரி போக்குவரத்து ஊழியர்கள் சில மாதங்களுக்கு முன்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.  #transportworkers #strike
    ×