search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சென்னை மாநகராட்சியின் 5 கவுன்சிலர்களுக்கு நோட்டீசு: பதவி பறிபோகும் ஆபத்து
    X

    சென்னை மாநகராட்சியின் 5 கவுன்சிலர்களுக்கு நோட்டீசு: பதவி பறிபோகும் ஆபத்து

    • அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக புகார்.
    • கவுன்சிலர்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் 5 பேர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக வந்த புகாரை தொடர்ந்து அவர்களிடம் விளக்கம் கேட்டு நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் நோட்டீசு அனுப்பி உள்ளார்.

    தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 2022-ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பட்டு மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் அந்தந்த வார்டுகளில் அதிகார துஷ்பிரயோகம் செய்யக் கூடாது.

    புகார்களுக்கு இடமின்றி மக்கள் பணியாற்ற வேண்டும் என்று கட்சித் தலைமை அறிவுரை கூறி இருந்தது. ஆனாலும் ஆங்காங்கே கவுன்சிலர்கள், மேயர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக புகார்கள் வந்தன.

    சமீபத்தில் கூட கோவை, நெல்லை தி.மு.க. மேயர்கள் மீது புகார்கள் வந்த காரணத்தால் அவர்களது பதவி பறிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி (தி.மு.க.) மீதும் புகார்கள் வந்தது. அவர் மீது தி.மு.க. கவுன்சிலர்களே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.

    ஆனாலும் கடைசி நேரத்தில் இதில் சமரசம் காணப்பட்டதால் நம்பிக்கை

    யில்லா தீர்மானம் ஓட்டெடுப்பில் கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை. இதனால் மகாலட்சுமியின் மேயர் பதவி தப்பியது.

    இப்போது சென்னை மாநகராட்சியில் உள்ள சில கவுன்சிலர்கள் மீது பல்வேறு புகார்கள் அரசுக்கு சென்ற வண்ணம் உள்ளது. இதனால் ஒவ்வொரு கவுன்சிலரின் செயல்பாடுகள் பற்றி உளவுப்பிரிவு அதிகாரிகள் அரசுக்கு தகவல் கொடுக்கத் தொடங்கி உள்ளனர்.

    சென்னை மாநகராட்சியில் 200 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதில் 3 பேர் இறந்து விட்ட நிலையில் 197 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் சிலர் மீது பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    புகார்கள் விரிவாக்கப்பட்ட மண்டலங்களான பெருங்குடி, சோழிங்கநல்லூர், மாதவரம், கொளத்தூர் உள்பட பல பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு கொடுப்பதற்கும், வீடுகள் கட்டுவதற்கும் இடையூறாக இருப்பதாகவும் புகார்கள் சென்றுள்ளன.

    ரூ.30 லட்சத்தில் வீடு கட்டினால் குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற ரூ.5 லட்சத்துக்கும் மேல் கேட்பதாகவும் பணம் கொடுக்காவிட்டால் பணிகளை நிறுத்துகின்றனர் என்றும் புகார்கள் சென்றுள்ளது. பணி மேற்கொள்ள வரும் ஒப்பந்த நிறுவன ஊழியர்களை வேலை செய்ய விடாமல் தடுப்பதாகவும், அதிகாரிகளை தரக்குறைவாக பேசி மிரட்டுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த விசயங்கள் அனைத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு தெரிய வந்ததும், எந்த கவுன்சிலராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு

    உள்ளார். அதன் அடிப்படையில் ஒவ்வொரு கவுன்சிலர்களின் செயல்பாடுகள் பற்றி முழு விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை பொதுத்தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட சட்டசபை தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற இப்போதே கட்சித் தலைமை வியூகம் வகுத்து வரும் நிலையில் கவுன்சிலர்களால் அரசுக்கு கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருதுகிறார்.

    அதனால்தான் பாராளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் கவுன்சிலர்களின் செயல்பாடுகள் குறித்து உளவுத்துறையிடம் விரிவான அறிக்கை கேட்டிருந்தார். அதன் அடிப்படையில் ஒவ்வொரு கவுன்சிலர்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

    இதில் சென்னை மாநகராட்சியில் பெரிய அளவில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக 5 கவுன்சி

    லர்கள் கண்டறியப்பட்டு உள்ளனர். இப்போது அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு

    உள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் கார்த்திகேயன் இதற்கான நோட்டீசை அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

    29-வது வார்டு கவுன்சிலர் கார்த்திகேயன் (தி.மு.க.), 189-வது வார்டு கவுன்சிலர் பாபு (தி.மு.க.), 195-வது வார்டு கவுன்சிலர் ஏகாம்பரம் (தி.மு.க.) ஆகியோருக்கு நோட்டீசு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

    இது தவிர மேலும் 2 கவுன்சிலர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. அதில் ஒரு கவுன்சிலர் வி.ஐ.பி. தொகுதியில் உள்ள பெண் கவுன்சிலர் என்று தெரிய வந்துள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மாநகராட்சி நிர்வாகத்துக்கே தெரியாமல் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

    அரசின் இந்த நடவடிக்கையால் அனைத்து மாநகராட்சி கவுன்சிலர்களும் கலக்கத்தில் உள்ளனர். தொடர்புடைய கவுன்சிலர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என தெரிகிறது.

    இதற்கு முன்பு நகர்ப்புற உள்ளாட்சி கவுன்சிலர்களின் பதவியை பறிப்பதில் ஏராளமான சட்ட சிக்கல்கள் இருந்தது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் விதி மீறல்களில் ஈடுபடும் கவுன்சிலர்களின் பதவியை உடனே பறிக்க முடியும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே குற்றச்சாட்டுக்கு உள்ளான கவுன்சிலர்களின் விளக்கத்தை பொறுத்து அவர்களின் பதவி தப்புமா? என்பது தெரியவரும்.

    Next Story
    ×