செய்திகள்

40 ரூபாய் விற்ற தக்காளி விலை 5 ரூபாயாக சரிவு

Published On 2017-12-21 04:55 GMT   |   Update On 2017-12-21 04:55 GMT
சென்னையில் தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கிலோ 40 ருபாய்க்கு விற்ற தக்காளி விலை கிலோவுக்கு ரூ.5ஆக விற்கிறது.
போரூர்:

சென்னையில் தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு கிலோ 40 ருபாய்க்கு விற்ற தக்காளி விலை கிலோவுக்கு ரூ.5ஆக விற்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை ரூ.80யை தொட்டதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்தனர். தற்போது ரூ.5-க்கு சரிந்து இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தக்காளி விலை கடும் சரிவுக்கு விளைச்சல் அதிகமாக உள்ளதே காரணாகும்.

தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில்தான் அதிகமாக தக்காளி விளைச்சல் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் சேலம், கிருஷ்ணகிரி, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் தக்காளி பயிரிடப்படுகிறது.

இங்கிருந்து கோயம்பேடு உள்பட மாநிலத்தில் உள்ள 5 பெரிய மார்க்கெட்டுகளுக்கு தக்காளி சப்ளை செய்யப்படுகிறது.

இம்மாவட்டங்களில் தக்காளி விளைச்சல் எதிர் பார்த்ததைவிட அதிகமாக இருக்கிறது. இதனால் மார்க்கெட்டுகளுக்கு வழக்கத்தைவிட நிறைய லோடு தக்காளி அனுப்பப்படுகிறது.

ஆனால் தக்காளி அழுகி விட கூடாது என்பதால் குறைந்த விலைக்கு கொடுக்கிறார்கள்.

இதேபோல் மற்ற காய்கறி விலைகளும் குறைந்துள்ளன. கோயம்பேடு மார்க்கெட்டில் 75 ரூபாய்க்கு விற்கப்பட்ட கேரட் 50 ரூபாய்க்கும், 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் 50ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 10ரூபாயிலிருந்து 8ரூபாய்க்கும், 45ரூபாய்க்கு விற்கப்பட்ட கத்தரிக்காய் 35ரூபாய்க்கும், 10ரூபாய்க்கு விற்கப்பட்ட கோஸ் 6ருபாய்க்கும், 45 ரூபாய்க்கு விற்கப்பட்ட பீட்ரூட் 35ரூபாய்க்கும், 25ரூபாய்க்கு விற்கப்பட்ட பீன்ஸ் 20ரூபாய்க்கும். இஞ்சி (30ரூபாய்) மற்றும் வெங்காயம் (38ரூபாய்) விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. பச்சை மிளகாய் 25 ரூபாயிலிருந்து சற்று உயர்ந்து 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

இதுபற்றி கோயம்பேடு மார்க்கெட் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், “அதிக விளைச்சல் காரணமாக தக்காளி விலை சரிந்து இருக்கிறது. இந்த விலை சரிவு ஜனவரி மாதம்தான் ஏற்படும் என்று எதிர் பார்த்தோம். ஆனால் இம்மாதமே விலை அதிரடியாக குறைந்து உள்ளது. இதேபோல் மற்ற காய்கறி விலைகளும் குறைந்து இருக்கிறது” என்றார்.

தக்காளி விலை குறைவால் விவசாயிகள் கடும் கவலை அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News