செய்திகள்

மாநில முதல்வரே உண்மையான நிர்வாக தலைவர்: ஆளுநர் ஆய்வு குறித்து ப.சிதம்பரம் கருத்து

Published On 2017-12-17 03:19 GMT   |   Update On 2017-12-17 03:19 GMT
மாநில ஆளுநர் பெயரளவில் மட்டுமே நிர்வாக தலைவர் எனவும், முதல்வரே உண்மையான தலைவர் என்றும் தமிழக ஆளுநரின் தொடர் ஆய்வுகள் குறித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

தமிழக ஆளுநராக பொறுப்பேற்றதும் பன்வாரிலால் புரோகித் கோவையில் கடந்த மாதம் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். ஆளுநரின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இருப்பினும், முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை.

கோவையை தொடர்ந்து நெல்லை மற்றும் கடலூரில் புரோகித் ஆய்வு கூட்டங்களை நடத்தினார். இது கடும் விமர்சனத்தை உண்டாக்கிய நிலையில், அரசியல் சாசனத்தின் படி ஆளுநருக்கு ஆய்வு மற்றும் அலுவல் கூட்டங்களை நடத்த உரிமை உள்ளது என்று ஆளுநர் மாளிகை நேற்று விளக்கமளித்தது.

இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக ஆளுநரின் நடவடிக்கை திடுக்கிட வைக்கிறது. மாநில ஆளுநர் என்பவர் பெயரளவில் மட்டுமே தலைவர். உண்மையான நிர்வாக தலைவர் மாநில முதல்வர் தான். மத்திய அரசை கண்டு முதல்வர் அச்சப்படுவதால் ஆளுநர் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார். ஆய்வுக்கூட்டங்களுக்கு ஆளுநர் அழைத்தால் செல்ல வேண்டாம் என முதல்வர் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News