செய்திகள்

ரூ.3 லட்சம் கடன் வாங்கிய நர்சு ஏமாற்றியதால் ஜாமீன் போட்ட பால்வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2017-12-11 12:10 GMT   |   Update On 2017-12-11 12:10 GMT
தஞ்சையில் ரூ.3 லட்சம் கடன் வாங்கி வீட்டு நர்சு வீட்டை காலி செய்து சென்று விட்டதால் ஏமாற்றம் அடைந்த பால்வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சாவூர்:

தஞ்சை கீழ வண்டிக்காரத் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 37). பால் வியாபாரி. இவருடைய மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு சந்தோஷ் என்ற மகனும் ஒரு கைக்குழந்தையும் உள்ளது.

முருகேசனின் வீட்டின் அருகே புஷ்கரணி என்ற பெண் வசித்து வந்தார். புஷ்கரணி மருத்துவக் கல்லூரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

இந்த சூழ்நிலையில் புஷ்கரணிக்கு பணம் தேவைப்பட்டது. அப்போது முருகேசனிடம் கேட்டுள்ளார். இதனால் முருகேசன் மன்னார் குடியில் உள்ள ஒருவரிடம் ரூ.3 லட்சம் கடனாக வாங்கி கொடுத்துள்ளார். அதுவும் முருகேசனின் வீட்டு பத்திரத்தை ஜாமீனாக வைத்து அந்த பணத்தை வாங்கியுள்ளார்.

பணத்தை பெற்று கொண்ட புஷ்கரணி அதன் பின் 3 மாதங்களாக அந்த பணத்திற்கு வட்டி கொடுத்து வந்தார். பின்னர் வட்டி கட்ட தவறியதாக கூறப்படுகிறது. மேலும் புஷ்கரணி முருகேசனின் வீட்டு பக்கத்தில் இருந்து அவர்களது வீட்டை காலி செய்து விட்டு தஞ்சை நாஞ்சிக்கோட்டை அருகே உள்ள ஆர்.எம்.எஸ். காலனி அருகே சென்று விட்டதாக கூறப்படுகிறது. ரூ. 3 லட்சம் பணத்திற்கு 3 மாதம் மட்டும் தான் வட்டி கட்டியுள்ளார். மேலும் புஷ்கரணி தற்போது வீட்டையும் காலி செய்து விட்டு சென்று விட்டார். இதற்கிடையே புஷ்கரணி வட்டி கட்டாததால் முருகேசன் நெருக்கடிக்கு உள்ளானார். இதனால் அவர் மனஉளைச்சல் அடைந்தார்.

இதை நினைத்து வேதனையடைந்த முருகேசன் இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் முருகேசன் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் தஞ்சை கிழக்கு போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News