செய்திகள்

கோட்டக்குப்பத்தில் இன்று மீனவர்கள் திடீர் சாலை மறியல்

Published On 2017-12-10 16:10 GMT   |   Update On 2017-12-10 16:10 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க கோரி மீனவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வானூர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு கேரள அரசு அளித்துள்ள ரூ.20 லட்சம் நிவாரண உதவி போல் தமிழக மீனவர்களுக்கும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதேபோல் விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதிக்குட்பட்ட தந்திராயன்குப்பம், சோதனைகுப்பம், சின்னமுதலியார்சாவடி, பிள்ளைசாவடி, பொம்மையார்பாளையம், நடுக்குப்பம் ஆகிய 6 கிராம மீனவர்கள் மற்றும் பெண்கள் உள்பட 1,500-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கோட்டக்குப்பம் பகுதியில் திரண்டனர்.

பின்னர் அவர்கள் கையில் கருப்பு கொடி ஏந்தியும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் ஊர்வலமாக சென்றனர்.

கோட்டக்குப்பம் ரவுண்டான பகுதிக்கு சென்ற அவர்கள் அங்கு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, இன்ஸ்பெக்டர் மீனாள், சப்-இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அங்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் சமரசம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமரசம் ஏற்பட்டதால் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் கிழக்கு கடற்கரை சாலை யில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News