செய்திகள்

இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த தொழிலாளி அடித்துக் கொலை: 5 பேர் கைது

Published On 2017-11-29 10:25 GMT   |   Update On 2017-11-29 10:26 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் குளிக்கும்போது ஆபாச படம் எடுத்து இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைதாகினர்.
குமாரபாளையம்:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஹைகூல் ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 42). தறிப்பட்டறை தொழிலாளி.

இவர், தன்னுடைய வீட்டின் அருகே வசிக்கும் பெண் குளித்தபோது அதனை படம் எடுத்து அவரை தகாத உறவுக்கு அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், தனது கணவர் காமராஜிடம்(43) இது பற்றி கூறினார்.

உடனே காமராஜ் நேராக சென்று நாகராஜியிடம் தட்டிக் கேட்டார். இதையடுத்து இருதரப்பினருக்கும் பிரச்சனை ஏற்பட்டது.

கடந்த 18-ந்தேதி காமராஜ் இது பற்றி தனது நண்பர்களிடம் தெரிவிக்க, அவர்கள் நாகராஜை தாக்கியுள்ளனர். பின்னர் அன்று மாலை சேலம்-கோவை புறவழிச்சாலை அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு காமராஜ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் மதுகுடிக்க சென்றபோது நாகராஜூம் அங்கு வந்துள்ளார். அவரை கண்டதும் ஆத்திரம் அடைந்த காமராஜ் தன்னுடன் இருந்தவர்களுடன் சேர்ந்து நாகராஜை அழைத்து சென்று மீண்டும் தாக்கினார்.

இதில் பலத்த காயம் அடைந்த நாகராஜ் சிகிச்சைக்காக ஈரோடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை தொடர்பாக நாகராஜ் மனைவி ஜமுனா(35) அளித்த புகாரின் பேரில் குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காமராஜ், இவரது உறவினர் மோகன்ராஜ் (27) மற்றும் நண்பர்கள் காந்திபுரம் பகுதியை சேர்ந்த காட்டூர் தினேஷ் குமார் (26), குமாரபாளையம், விட்டலபுரி பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் மீனாட்சி சுந்தரம் (45), அதே பகுதியை சேர்ந்த ஜீவா(24) ஆகியோரை கைது செய்தனர்.

கைதான காமராஜ் போலீசாரிடம் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

எனது வீட்டின் அருகே வசித்து வந்தவர் நாகராஜ். கடந்த சில வாரங்களுக்கு முன்பு எனது மனைவி வீட்டின் அருகே குளித்தபோது அதனை நாகராஜ் ரகசியமாக செல்போனில் படம் பிடித்தார். பின்னர் அந்த காட்சிகளை காட்டி எனது மனைவியிடம் உல்லாசத்துக்கு வருமாறு அழைத்தார். ஆசைக்கு இணங்க மறுத்தால் ஊரில் உள்ள மற்றவர்களின் செல்போனுக்கு இந்த காட்சிகளை அனுப்பி விடுவேன் என கூறினார்.

இதனால் பயந்து போன எனது மனைவி என்னிடம் இந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். நான், நாகராஜிடம் செல்போனில் பதிவு செய்த அந்த ஆபாச காட்சிகளை உடனடியாக அழித்து விடும்படியும், செல்போனில் உள்ள அந்த மெமரி கார்டை எடுத்து தருமாறும் கேட்டேன். ஆனால், அவர் மெமரி கார்டை தர மறுத்தார்.

இதனால் கோபம் அடைந்த நான், எனது மைத்துனர் மோகன்ராஜ் மற்றும் நண்பர்கள் காட்டூர் தினேஷ்குமார், மீனாட்சி சுந்தரம், ஜீவா ஆகியோரிடம் இது பற்றி தெரிவித்தேன். அவர்களும் சென்று எதுக்குடா படம் எடுத்த என்று கூறி செல்போனையும், மெமரி கார்டையும் கொடுக்குமாறு கேட்டனர். ஆனால் நாகராஜ் மெமரி கார்டை கொடுக்க மறுத்தார். இதனால் எனது நண்பர்கள் அவரை தாக்கினர்.

இந்த நிலையில் நானும், எனது நண்பர்களும் மது குடிப்பதற்காக கோட்டை மேடு-சாணார்பாளையம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றோம். அங்கு நாகராஜூம் வந்தார். எனது மனைவியை ஆபாச படம் எடுத்து விட்டானே என ஆத்திரத்தில் இருந்த நான், அவரை அழைத்து சென்று டாஸ்மாக் கடையின் பின்புறம் உள்ள மணி என்பவருடைய தோட்டத்தில் வைத்து செல்போனையும், மெமரி கார்டையும் தருமாறு கேட்டேன். அப்போது நாகராஜ் மெமரி கார்டை உடைத்து கொடுத்தார். ஆனால் அவர் செல்போனை தர மறுத்து விட்டார்.

இதனால் நாங்கள் அந்த செல்போனை அவரிடம் இருந்து வலுகட்டாயமாக வாங்கினோம். இதில் நாகராஜிக்கும் எங்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது மாறி மாறி அடித்ததில் நாகராஜ் பலத்த காயம் அடைந்து கீழே சரிந்தார். பின்னர் நாங்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டோம்.

படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டார். போலீசார் விசாரணையில் நாங்கள் மாட்டிக்கொண்டோம்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியதாக தெரிகிறது.

கைது செய்யப்பட்ட காமராஜ் மற்றும் முன்னாள் கவுன்சிலர் மீனாட்சி சுந்தரம் உள்பட 5 பேரையும் போலீசார் திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News