செய்திகள்

புதுவையில் ஓட, ஓட விரட்டி வாலிபர் வெட்டிக்கொலை

Published On 2017-11-20 05:51 GMT   |   Update On 2017-11-20 05:51 GMT
புதுவையில் இன்று காலை ஓட, ஓட விரட்டி வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசார் 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:

புதுவை முத்தியால்பேட்டையில் இருந்து இன்று காலை ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் அண்ணாசாலை நோக்கி வந்து கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து காரில் ஒரு கும்பல் வந்தது.

போத்தீஸ் ஜவுளிக்கடை அருகே வந்தபோது காரில் வந்த அந்த கும்பல் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் நிலைத்தடுமாறி அந்த வாலிபர் கீழே சாய்ந்தார். அப்போது காரில் இருந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல் கத்தியுடன் ஓடிவந்தது. உடனே அந்த வாலிபர் தப்பிக்க அருகில் உள்ள வீட்டுக்குள் நுழைய முயன்றார்.

வீட்டு உரிமையாளர் கதவை சாத்திக் கொண்டதால் அந்த வாலிபரால் தப்பி ஓடி முடியவில்லை. உடனே அந்த கும்பல் வாலிபரை சரமாரியாக வெட்டியது. பின்னர் அவர்கள் காரில் ஏறி தப்பி சென்றுவிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஒதியஞ்சாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த வாலிபரை மீட்டு புதுவை அரசு அஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிது நேரத்திலேயே அந்த வாலிபர் இறந்து போனார்.

இதையடுத்து கொலை செய்யப்பட்ட வாலிபர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கொளஞ்சியப்பன் என்பதும், இவர் மீது 2 கொலை வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே காரில் தப்பி சென்ற கொலையாளிகள் கடலூர் சாலையில் செல்லும்போது பதட்டத்தில் பல இடங்களில் விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு சென்றனர். இதனால் பொதுமக்கள் அந்த காரை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். தவளக்குப்பம் அருகே சென்றபோது அந்த காரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

அப்போது காரில் இருந்து 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். மற்ற 2 பேரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவர்களை தவளக்குப்பம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News