செய்திகள்

நாகர்கோவிலில் காம்பவுண்டு சுவர் இடிந்து தொழில் அதிபர் மனைவி பலி

Published On 2017-11-04 05:37 GMT   |   Update On 2017-11-04 05:37 GMT
நாகர்கோவிலில் இன்று காலை காம்பவுண்டு சுவர் இடிந்து தொழில் அதிபர் மனைவி பலியானார். இந்த விபத்து குறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மலையோர பகுதியில் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக அடையாமடையில் 31 மில்லி மீட்டர் மழை பதிவானது.

நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம் பகுதியில் சாரல் மழை நீடித்து வருகிறது. மழைக்கு சுவர் இடிந்து பெண் ஒருவர் பலியானார்.

நாகர்கோவில் மறவன்குடியிருப்பு ஈத்தாமொழி ரோட்டைச் சேர்ந்தவர் மிக்கேல்ராய். இவர் அந்த பகுதியில் மர அறுவை மில் நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜான்சி மேரி (வயது 48).

இவரது வீட்டு முன்பக்கம் காம்பவுண்டு சுவரை ஒட்டி ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டால் செட் அமைத்து அதனை சமையலறையாக பயன்படுத்தி வந்தனர். இன்று காலை அந்த அறையில் ஜான்சிமேரி சமையல் செய்து கொண்டு இருந்தார். அப்போது காம்பவுண்டு சுவர் திடீரென இடிந்து சமையல் அறை மீது விழுந்தது. இதில் அந்த அறை தரைமட்டமானது. அப்போது சமையல் செய்து கொண்டு இருந்த ஜான்சி மேரி, இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

சுவர் இடிந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த ஜான்சி மேரியை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மழையால் காம்பவுண்டு சுவர் ஈரப்பதமாகி இடிந்து விழுந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பலியான ஜான்சி மேரிக்கு ஷெபின் என்ற மகனும், ஷெபி என்ற மகளும் உள்ளனர்.
Tags:    

Similar News