செய்திகள்

‘மெர்சல்’ காட்சிகளுக்கு நாராயணசாமி ஆதரவு

Published On 2017-10-22 12:12 GMT   |   Update On 2017-10-22 12:12 GMT
மெர்சல் படத்தில் உள்ள காட்சியே அகற்ற வேண்டும் என்று சொல்வது தவறான போக்கு என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி:

புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மக்களின் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக பாரதீய ஜனதா செயல்பட்டு வருகிறது. ஊடகங்கள், சினிமா போன்றவற்றில் மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பது வழக்கமானதுதான்.

பல படங்களில் இதே போல் கருத்துக்கள் வந்துள்ளன. அதேபோல் தான் இந்த படத்திலும் தகவல்களை கூறி இருக்கிறார்கள். இதற்காக கோபப்படுவதில் அர்த்தம் இல்லை.

அதில் என்ன நிறை குறை இருக்கிறது என்பதை ஆராய்ந்து சரி செய்வதற்கு பார்க்க வேண்டும். இதற்காக இந்த படத்தில் உள்ள காட்சியையே அகற்ற வேண்டும் என்று சொல்வது தவறான போக்கு.

மத்திய அரசால் விமர்சனங்களை தாங்கி கொள்ள முடியவில்லை. எனவேதான் இப்படி நடந்து கொள்கிறார்கள். இந்த நாட்டில் யார் வேண்டு மானாலும் தங்கள் கருத்தை சொல்வதற்கு உரிமை உள்ளது.

நான் கூட ஜி.எஸ்.டி.யில் உறுப்பினராக இருக்கிறேன். அதில் உள்ள குறைகள் குறித்து பல்வேறு விமர்சனங்களையும் செய்து வருகிறேன். இதற்காக என் மீது வழக்கு போடுவார்களா?

ஜி.எஸ்.டி. வரியால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே, அதை குறைப்பதற்கு அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

கர்நாடகா, கேரளாவில் மாற்று சமுதாயத்தினரை அர்ச்சகராக நியமித்து இருப்பது குறித்து தகவல் வந்துள்ளது. ஆனால், புதுவையை பொறுத்த வரை கிராமப்புற கோவில்களில் மாற்று சமூகத்தினர் தான் அர்ச்சகராக உள்ளனர்.

புதுவை கோவில்களில் எந்தெந்த சமூகத்தினர் அர்ச்சகராக உள்ளனர். என்பது பற்றி கணக்கெடுக்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

Tags:    

Similar News