செய்திகள்

அரவக்குறிச்சி அருகே நள்ளிரவில் டாஸ்மாக் கடையில் பயங்கர தீ விபத்து

Published On 2017-10-22 12:07 GMT   |   Update On 2017-10-22 16:24 GMT
அரவக்குறிச்சி அருகே நள்ளிரவில் டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.23 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள், பணம் எரிந்து சாம்பலானது.
அரவக்குறிச்சி:

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் பள்ளப்பட்டி-மார்க்கம்பட்டி சாலையில் சூரியப்பாளி கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. ஆஸ்பெஸ்டாஸ் கூரையால் வேயப்பட்ட இந்த கடையில் விற்பனையாளராக அதே பகுதியை சேர்ந்த அங்கமுத்து என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் விற்பனை பணம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தை கல்லாப்பெட்டியில் வைத்து விட்டு கடையை பூட்டிச் சென்றார். நள்ளிரவில் கடையில் இருந்து புகை வந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கமுத்துவுக்கு தகவல் கொடுத்தனர்.

அவர் வருவதற்குள் கடையில் ஏற்பட்ட புகையின் அளவு அதிகமானது. அங்கமுத்து வந்து கடையை திறந்த போது உள்ளே தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். மேலும் அவர் அரவக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் நிலைய அலுவலர் செல்வம் தலைமையில் மாவட்ட தீயணைப்பு அதிகாரி அப்துல் பாரி மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் கடை முற்றிலும் எரிந்தது. அவர்கள் தீயானது மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

இந்த விபத்தில் ரூ.21 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் மற்றும் விற்பனை பணம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் முற்றிலும் எரிந்து சாம்பலானது. அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டியில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
Tags:    

Similar News