செய்திகள்

நடிகர் விஜய் மக்களை குழப்புகிறார்: மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கண்டனம்

Published On 2017-10-20 06:33 GMT   |   Update On 2017-10-20 06:33 GMT
மெர்சல் படத்தில் உண்மைக்கு மாறான வசனம் பேசி நடிகர் விஜய் மக்களை குழப்புகிறார் என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்:

நாகர்கோவிலில் இன்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் திரைத்துறையில் பிரபலமாகி அரசியலுக்கு வந்து சரித்திர சாதனை படைத்தவர் எம்.ஜி.ஆர்.

இவர், திரையுலகில் இருக்கும்போதே அரசியலிலும் ஈடுபட்டு மக்களின் மனங்களை அறிந்தவர். இதனால் தமிழகத்தின் முதல்-அமைச்சரானார்.

திரையுலகம் மட்டுமின்றி எந்த துறையில் இருந்தும், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஜனநாயக முறைப்படி ஓட்டு உரிமை உள்ளவர்கள் அரசியலில் ஈடுபடலாம்.

பொது வாழ்வில் கருத்து தெரிவிப்பவர்கள் அதனை முழுமையாக அறிந்த பின்பே கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். ஆனால் நடிகர் கமலஹாசன் ஒரு கருத்தை தெரிவித்து விட்டு பின்னர் அதை மாற்றிக் கொள்கிறார். பண மதிப்பு இழப்பு உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்களில் அவர், இவ்வாறு பேசி உள்ளார். அவர் இன்று ஒன்றை சொல்வார், நாளை அதை மாற்றி பேசுவார்.

நடிகர் விஜய், தான் சார்ந்திருக்கும் திரைத்துறையை தவறாக பயன்படுத்தக்கூடாது. அவர் நடித்து இப்போது வெளியாகி உள்ள மெர்சல் படத்தில் மத்திய அரசை விமர்சித்து வசனங்கள் இடம் பெற்றுள்ளது. இது மக்களை குழப்புவதாக உள்ளது.

அந்த வசனங்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும். சினிமாவில் நடிக்க வந்த எல்லோரும் எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிவிட முடியாது. அவர்களின் பாணியே வேறு. நடிகர் சோவும் அரசியலை விமர்சித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார். ஆனால் அது மக்களை ரசிக்க வைப்பதாக இருக்கும்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. டெங்கு காய்ச்சல் உற்பத்தியாக காரணமாக இருந்த நிறுவனங்கள், கடைகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அபராதம் விதித்ததுபோல் சுகாதாரத்தை சரியாக பேணாத அரசு பள்ளிகள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகங்கள் இதனை கண்காணித்து செயல்பட வேண்டும்.

கர்நாடகாவில் மெர்சல் படத்தை திரையிடவிடாமல் அங்குள்ளவர்கள் தடுத்துள்ளனர். அங்கு தமிழர்களுக்கு எதிரான செயல்பாடுகளை காங்கிரஸ் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் தி.மு.க. இதனை தட்டிக்கேட்பது இல்லை.

தி.மு.க. தொண்டர்கள் தூங்கிக் கிடக்கிறார்கள். அவர்களை தட்டி எழுப்பவே மு.க. ஸ்டாலின் மீண்டும் 180 நாள் எழுச்சி யாத்திரை தொடங்க இருக்கிறார். ஏற்கனவே நடந்த நமக்கு நாமே யாத்திரைக்கு எந்த பலனும் கிடைக்காத நிலையில் இப்போது தொடங்க இருக்கும் யாத்திரையும் தி.மு.க.வுக்கு பலன் தராது.

தமிழகத்தில் கருணாநிதியின் செயல்பாடு குறைந்து போனதும், ஜெயலலிதாவின் மரணமும் வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது. அதை மறுப்பதற்கில்லை.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தேன். அவர் அதை ஏற்றுக் கொண்டார். மத்திய கல்வி மந்திரியுடன் பேசியபோது 62 நவோதயா பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

அதில், 10 பள்ளிகளையாவது தமிழகத்திற்கு கொண்டு வர முயற்சி செய்தேன். ஆனால் தி.மு.க.வினர் இதனை தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News