செய்திகள்

டெங்கு தொடர் மரணம், தமிழக அரசின் செயலற்ற தன்மையை காட்டுகிறது: திருமுருகன் காந்தி

Published On 2017-10-10 12:02 GMT   |   Update On 2017-10-12 11:53 GMT
டெங்கு தொடர் மரணம் தமிழக அரசின் செயலற்ற தன்மையை காட்டுகிறது. பா.ஜனதா தயவோடு தமிழகத்தில நடைபெறும் இந்த ஆட்சி ஊழலில் திளைத்த ஆட்சியாக உள்ளது என்று திருமுருகன் காந்தி கூறினார்.
சேலம்:

பர்மாவில் உள்ள ரோஹிங்ய முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்தும், இந்தியாவிற்கு வரும் அகதிகளை வெளியேற்ற கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தியும், நீட்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்ககோரியும்  த.மு.மு.க. சார்பில் சேலத்தில் பொதுக்கூட்டம் நடந்தது.

இதில் மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் யூனுஸ் அஹமது தலைமை தாங்கினார். அப்துல் சமது, அஸ்லம் பாஷா உள்பட பலர் எழுச்சி உரையாற்றினர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசியதாவது:-

நீட் தேர்வை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதனால் ஏழை, எளிய மாணவர்கள் கடும் பாதிப்புககு உள்ளாகி வருகிறார்கள். எனவே, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ். எதிராக தமிழகத்தில் பலமான அணி உள்ளது. மக்களுக்கு ஆதரவாக போராட அனைவரும் ஒன்று திரளவேண்டும். மே17 இயக்கம் அதற்கு துணை நிற்கும்.

பிரதமர் மோடி அவரது மாநிலத்தில் இருந்து மேற்கத்திய நாடுகளில் வியாபாரம் செய்வதற்காக வியாபாரிகளை அழைத்து செல்கிறார். ஆனால், தமிழக வியாபாரிகளுக்கு மேறகத்திய நாடுகளில் வியாபாரம் செய்ய தகுதி இல்லை என்கிறார்.

ராணுவத்தை வருமானம் கொழிக்கும் தொழிலாக மத்திய அரசு மாற்றி வருகிறது. ரேசன் கடைகளை மூட முயற்சி செய்து வருகிறது. தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருவது கண்டித்தக்கது.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

டெங்கு தொடர் மரணம் தமிழக அரசின் செயலற்ற தன்மையை காட்டுகிறது. பாரதீய ஜனதா தயவோடு தமிழகத்தில நடைபெறும் இந்த ஆட்சி ஊழலில் திளைத்த ஆட்சியாக உள்ளது.

இந்திய ராணுவத்திற்கு நிர்மலா சீத்தாராமனை மந்திரியாக நியமித்தது தமிழக மக்களை ஏமாற்றும் செயலாகும். டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுப்பது, ஓ.என்.ஜி.சி. குழாய் பதிப்பது உள்பட பல்வேறு மக்கள் விரோத செயல்களில் மத்திய அரசு செயல்படுகிறது. இதனை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News