செய்திகள்

திருச்சி அருகே தலைமலை கோவிலில் 4,500 அடி உயரத்தில் கிரிவலம் சென்று பக்தர்கள் மெய்சிலிர்க்கும் வழிபாடு

Published On 2017-09-24 11:34 GMT   |   Update On 2017-09-24 11:34 GMT
திருச்சி அருகே 4,500 அடி உயரத்தில் உள்ள தலைமலை கோவிலில் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபாடு நடத்தியது மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்தது.

தா.பேட்டை:

திருச்சி மாவட்டம் தா. பேட்டை நீலியாம்பட்டி கிராமத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தலைமலை. இந்த தலைமலை சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரம் கொண்டதாகும்.

இந்த மலை உச்சியில் பிரசித்தி பெற்ற சஞ்சீவிராய நல்லேந்திரபெருமாள் கோவில் உள்ளது. பக்தர்கள் கரடு, முரடான மலைப்பாதையில் ஏறி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவில் பெருமாளை வேண்டிக்கொண்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமணத்தடை அகலும், குடும்பம் செழிப்படையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

இக்கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று சஞ்சீவி நல்லேந்திரபெருமாள், வெங்கடாஜலபதி, அலமேலு மங்கை தாயார், மகாலட்சுமி, ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சநேயர், கருடாழ்வார், கருப்பண்ணசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபி ஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

மேலும் 4,500 அடி உய ரமுள்ள மலை உச்சியில் கோவிலின் சுற்றுப்பிரகார விளிம்பில் 2 அடி அங்குலம் உள்ள சுவரை பிடித்து கொண்டு பக்தர்கள் கிரிவலம் வந்தனர். இது காண்பவர்களை மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்தது.

விவசாயம் செழிப்பாக விளங்கிட தங்களது வயலில் விளையும் காய்கறிகள், நெல், கடலை உள்ளிட்ட தானியங்களையும் பக்தர்கள் கோவிலுக்கு வழங்கினர். மலைஅடிவாரத்தில் தளுகை பூஜை நடத்தி பக்தர்கள் அன்னதானம் வழங்கினர். மலைஉச்சிக்கு செல்ல முடியாத பக்தர்கள் அடிவாரத்தில் உள்ள ஸ்ரீபூமி, நீலா தேவி சமேத லட்சுமிநாராயண சுவாமி பெருமாள் கோவிலில் வழிபட்டு சென்றனர்.

Tags:    

Similar News