செய்திகள்

நொய்யல் ஆற்றில் 5 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு

Published On 2017-09-19 11:11 GMT   |   Update On 2017-09-19 11:11 GMT
கன மழையால் நொய்யல் ஆற்றில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது.
கோவை:

கோவையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த 16-ந் தேதி முதல் மழை இடைவிடாமல் கொட்டி தீர்த்தது. இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் கோவை மாநகர பகுதியில் ஓடும் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் செல்கிறது.

இதையடுத்து நொய்யல் ஆற்றில் கட்டப்பட்டுள்ள சித்திரை சாவடி, குனியமுத்தூர், சுண்ணாம்பு கால்வாய், ஒட்டர்பாளையம், பட்டணம் புதூர், ராவத்தூர் ஆகிய தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. மேலும் நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

இதனால் நரசாம்பதி குளம், வேடப்பட்டி புதுக்குளம், கோளராம்பதி குளம், பேரூர் செங்குளம், பேரூர் செட்டிபாளையம், சொட்டையாண்டி குளம், குறிச்சி குளம், உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம் உள்பட பல்வேறு குளங்களுக்கு நொய்யல் ஆற்றில் இருந்து தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது.

இதில் புதுக்குளம், கோளராம்பதிகுளம், நரசாம் பதிகுளம் ஆகிய குளங்கள் நிரம்பும் நிலையில் உள்ளன.

வறட்சியால் தண்ணீரின்றி வறண்டு கிடந்த இந்த குளங்கள் தற்போது மழையால் நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தண்ணீர் நிரம்பி வருவதால் குளங்கள் எல்லாம் கடல் போல் காட்சியளித்து வருகிறது.

நொய்யல் ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. இதனால் பேரூர் படித்துறையில் உள்ள படிக்கட்டுகளை மூழ்கடித்த படி வெள்ளம் செல்கிறது.
Tags:    

Similar News