செய்திகள்

கொடைக்கானலில் தொடர் மழையால் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Published On 2017-09-18 05:45 GMT   |   Update On 2017-09-18 05:45 GMT
கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மன்னவனூர்:

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, கிளாவரை, பூம்பாறை, கூக்கால், கும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

இதனால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து தொடங்கி உள்ளது. இப்பகுதியில் சாலைகள் சேதம் அடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற முறையில் மாறி வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

கொடைக்கானலில் இருந்து கிளாவரை வரை 45 கி.மீ. தூரம் உள்ள சாலையில் 30 கி.மீ. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது பெய்து வரும் மழையினால் இப்பகுதி முழுவதும் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கன மழையால் மரங்கள் தொடர்ந்து விழுந்து வருவதால் வனத்துறையினர் இவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் வாகனங்கள் தாமதமாகவே செல்கின்றன. இதேபோல் கொடைக்கானல்- வத்தலக்குண்டு சாலையில் பெருமாள்மலையில் ராட்சத மரம் வேரோடு முறிந்து விழுந்தது. இதனால் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

நேற்று விடுமுறை தினம் என்பதால் தொலைவில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் குறித்த நேரத்துக்கு சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் அவதி அடைந்தனர். நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் சுற்றுலா பயணிகள் மரத்தை அகற்றினர். அதன்பின்பு போக்குவரத்து சீரடைந்தது.

Tags:    

Similar News