செய்திகள்

காஜல் அகர்வாலை தொடர்ந்து தற்போது செருப்பு கால்: தொடரும் ‘ஸ்மார்ட் கார்டு’ குளறுபடி

Published On 2017-09-17 07:56 GMT   |   Update On 2017-09-17 08:09 GMT
ஸ்மார்ட் ரேஷன் கார்டில் காஜல் அகர்வால் புகைப்பட இடம் பெற்ற சர்ச்சை ஓய்ந்த சில நாட்களிலேயே தர்மபுரியைச் சேர்ந்த மகேஷ் என்பவரின் ஸ்மார்ட் கார்டில் செருப்புடன் கால் இருப்பது போல புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
தர்மபுரி:

தமிழகத்தில் பயன்பாட்டில் இருந்த குடும்ப அட்டைகள் தற்போது ஸ்மார்ட் கார்டு வடிவில் நவீனம் பெற்று வருகின்றன. மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சரோஜா என்பவரது ஸ்மார்ட் கார்டில் அவரது புகைப்படத்திற்கு பதிலாக நடிகை காஜல் அகர்வால் புகைப்படம் அச்சிடப்பட்டு வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியது. 

இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி, சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளான பின்னர் சரியான புகைப்படம் அச்சிடப்பட்டு அவருக்கு புதிய கார்டு வழங்கப்பட்டது.

இந்த பரபரப்பு ஓய்வதற்குள்ளாகவே தர்மபுரி மாவட்டம் போசிநாயக்கம்பட்டி கிராமத்தில் உள்ள மகேஷ் என்பவரின் ரேசன் ஸ்மார்ட் கார்டில் அவரின் புகைப்படத்திற்கு பதிலாக செருப்புடன் கூடிய கால் ஒன்றின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

இதனால், மீண்டும் நெட்டிசன்கள் தமிழக அரசை துவைக்க ஆரம்பித்துள்ளனர். 
Tags:    

Similar News