செய்திகள்
விவசாயி வெள்ளியங்கிரி நாதன்

டிராக்டரை ஜப்தி செய்ததால் விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2017-09-07 10:09 GMT   |   Update On 2017-09-07 10:09 GMT
தனியார் வங்கியில் வாங்கிய ரூ.5 லட்சம் கடனுக்காக டிராக்டரை ஜப்தி செய்ததால் விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கணபதி பாளையம் ஊராட்சி மலையம் பாளையம் கிராமம் மணியகாரர் தோட்டத்தை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி நாதன் (வயது 60). விவசாயி.

இவர் விவசாய வேலைகளுக்காக கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருப்பூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ரூ.5 லட்சம் கடன் பெற்று டிராக்டரை வாங்கினார். 6 மாதத்திற்கு ஒரு முறை ரூ. 60 ஆயிரம் வீதம் ரூ.1லட்சத்துக்கு மேல் தவணைத் தொகை செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் தவணை தொகை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வங்கி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தை அணுகி டிராக்டரை ஜப்தி செய்ய உத்தரவு பெற்றது. இந்த நிலையில் நேற்று மாலை போலீசார் துணையுடன் சென்று மலையம்பாளையத்தில் வெள்ளியங்கிரி நாதனின் டிராக்டரை வங்கி நிர்வாகத்தினர் ஜப்தி செய்தனர்.

டிராக்டர் ஜப்தி நடவடிக்கையால் விவசாயி வெள்ளியங்கிரிநாதன் மனவேதனையில் பல்லடம் அரசு மருத்துவமனை அருகில் சாலையோரம் வி‌ஷத்தை குடித்து மயங்கி விழுந்து கிடந்தார்.

அங்கு உயிருக்கு போராடிய அவரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக பல்லடம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி இரவு வெள்ளியங்கிரி நாதன் பரிதாபமாக இறந்தார்.

இது பற்றி பல்லடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேத பரிசோதனைக்காக வெள்ளியங்கிரிநாதன் உடல் கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொண்ட விவசாயி வெள்ளியங்கிரிநாதனுக்கு பேபி என்ற சரோஜா (45) என்ற மனைவியும், ஞானசிவம் (15) என்ற மகனும் உள்ளனர்.

வங்கி கடனுக்காக விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயி தற்கொலை பற்றி தகவல் அறிந்தவுடன் உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் செல்ல முத்து, மாவட்ட நிர்வாகிகள் வாவிபாளையம் வெங்கடாசலம், சோமசுந்தரம், மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் சோமசுந்தரம் மற்றும் பலர் அஞ்சலி செலுத்தினர்.

இதுகுறித்து உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் செல்லமுத்து கூறியதாவது:-

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயி வெள்ளியங்கிரிநாதன் தற்கொலைக்கு உரிய நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம்.

விவசாயி வெள்ளியங்கிரிநாதன் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். தற்கொலைக்கு காரணமான தனியார் வங்கி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே இன்று காலை பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டில் விவசாயிகள், அனைத்து கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். வங்கி கடனுக்காக விவசாயி வெள்ளியங்கிரி நாதன் தற்கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Tags:    

Similar News