செய்திகள்

தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி ஆலோசித்து முடிவெடுப்போம்: ஜி.கே. வாசன் பேட்டி

Published On 2017-08-27 11:04 GMT   |   Update On 2017-08-27 11:04 GMT
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆதரவு கேட்டதால் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தோம். இனி தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி ஆலோசித்து முடிவெடுப்போம் என்று வாசன் கூறினார்.

கரூர்:

த.மா.கா. உயர்மட்டக்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.பி.யுமான நாட்ராயன் இல்லத் திருமண வரவேற்பு விழா கரூரில் நடந்தது. இதில் பங்கேற்ற கட்சி தலைவர் ஜி.கே. வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழகத்தில் மக்களின் நம்பிக்கையை பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் ஆட்சி செய்ய வேண்டும். மாறாக அவநம்பிக்கையை தரும் வகையில் நடந்து கொள்ள கூடாது. தமிழகத்தில் தற்போது அசாதாரண சூழல் நிலவுகிறது. ஆட்சியிலும், அதிகாரத்திலும், கட்சியிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. உட்கட்சி பிரச்சினையால் தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாகி உள்ளது. அதற்கு நீட் தேர்வு ஒரு உதாரணம்.

சட்டமன்றத்தில் ஸ்திரதன்மையை நிரூபிக்க வேண்டிய நிலை உள்ளது. இதில் ஓரணியில் செயல்படுமா? செயல்படாதா என்பது ஒரு சில எம்.எல்.ஏ.க்களின் எண்ணத்தில் உள்ளது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆதரவு கேட்டதால் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தோம்.

இனி தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி ஆலோசித்து முடிவெடுப்போம். அ.தி.மு.க.வை யார் பிரித்தாளுகிறார்கள், உடந்தையாக இருக்கிறார்கள். துணை போகிறார்கள் என்பதை மக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் வாக்குச்சீட்டை துருப்பு சீட்டாக பயன்படுத்தி இதற்கு விடை கொடுப்பார்கள்.

தமிழகத்தில் விவசாயிகள் பருவமழை பொய்த்ததால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். கரூர் தாதம்பாளையம் ஏரியை தூர்வாரி தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது முன்னாள் எம்.பி. நாட்ராயன், முன்னாள் எம்.எல்.ஏ. விடியல்சேகர், இளைஞரணி யுவராஜ், மாநில நெசவாளர் அணி செயலாளர் எம்.ராஜேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News