செய்திகள்

ஜல்லிக்கட்டு போராட்ட விசாரணை அறிக்கை 7 மாதத்தில் தாக்கல் செய்யப்படும்: விசாரணை கமிஷன் தலைவர்

Published On 2017-08-17 04:14 GMT   |   Update On 2017-08-17 04:14 GMT
தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான விசாரணை அறிக்கை 7 மாதத்தில் அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று விசாரணை கமிஷன் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தெரிவித்தார்.
கோவை:

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தின் இறுதி கட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. சென்னையில் பல்வேறு இடங்களில் ஆட்டோக்களுக்கு தீ வைக்கப்பட்டன. மேலும் சென்னை, கோவை, மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதற்கு பல்வேறு அமைப்புகள், கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து தமிழக அரசு ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தது. இதனிடையே கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம், அதையொட்டி நடைபெற்ற தடியடி சம்பவம் குறித்து விசாரணை கோவை ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் விசாரணை கமிஷன் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் கலந்து கொண்டு சாட்சிகளிடம் விசாரணை நடத்தினார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். ஒரு நாளுக்கு 5 பேர் என்ற வீதத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் 6 அல்லது 7 மாதங்களில் விசாரணையை முடித்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

சென்னையில் ஆட்டோ எரிக்கப்பட்டது, கல்வீச்சு, தடியடி உள்ளிட்டவை நடைபெற்றது உண்மை. இந்த சம்பவங்களுக்கு யார்-யார் பொறுப்பேற்பது என்பதுதான் பிரச்சினை. சென்னையில் நடைபெற்ற ஆட்டோ எரிப்பு சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் இதுவரை விசாரணை நடத்தவில்லை. அடுத்த வாரம் போலீசாரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

ஜல்லிக்கட்டு தொடர்பான இறுதிகட்ட போராட்டம் எங்களது கைகளை விட்டு போய்விட்டதாக, இதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த போராட்டம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் புகைப்படங்கள், குறுந்தகடுகள் (சி.டி.) உள்ளிட்ட ஆதாரங்களை வழங்கி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News