செய்திகள்
லாரி தீப்பிடித்து எரிவதையும், தீயணைப்பு வீரர்கள் அதனை அணைப்பதையும் படத்தில் காணலாம்.

சமயநல்லூர் அருகே ‘டிரான்ஸ்பார்மர் ஆயில்’ ஏற்றி வந்த லாரியில் திடீர் தீவிபத்து

Published On 2017-07-24 06:49 GMT   |   Update On 2017-07-24 06:49 GMT
சமயநல்லூர் அருகே டிரான்ஸ்பார்மர் ஆயில் பேரல் ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரம் போராடி தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.
வாடிப்பட்டி:

ஐதராபாத்தில் இருந்து ‘டிரான்ஸ்பார்மர் ஆயில்’ 65 பேரல்களை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடிக்கு ஒரு லாரி புறப்பட்டது.

திருநெல்வேலியைச் சேர்ந்த டிரைவர் குமார் (வயது 32) கிளீனர் முருகன் (27) ஆகியோர் லாரியில் இருந்தனர்.

மதுரை மாவட்டம், சமயநல்லூர் ரெயில்வே மேம்பாலம் பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் லாரி வந்து கொண்டிருந்தது.

ரெயில்வே மேம்பாலத்தை லாரி கடந்த போது அதன் பின் பகுதியில் திடீரென தீ எரியத் தொடங்கியது.

இதனை கவனித்துவிட்ட டிரைவர் குமார், கிளீனர் முருகன் ஆகியோர் லாரியில் இருந்து கீழே குதித்தனர். தீ விபத்து குறித்து சோழவந்தான் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் காற்றின் வேகம் காரணமாகவும், பேரலில் டிரான்ஸ்பார்மர் ஆயில் இருந்ததாலும் தீ வேகமாக பரவி லாரி முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது.

இதனை தொடர்ந்து மதுரை தல்லாகுளம் தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து தீயை அணைத்தனர். சுமார் 2 மணி நேரம் போராடி அவர்கள் தீயை அணைத்தனர்.

இருப்பினும் 65 பேரல் டிரான்ஸ்பார்மர் ஆயில், லாரியுடன் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் காரணமாக அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News