செய்திகள்

பைக் மோதி விவசாயி பலி: விபத்து ஏற்படுத்திய வாலிபர் வீட்டில் பிணத்துடன் உறவினர்கள் முற்றுகை

Published On 2017-07-21 12:55 GMT   |   Update On 2017-07-21 12:55 GMT
ஆரணி அருகே பைக் மோதி விவசாயி பலியானார். விபத்து ஏற்படுத்திய வாலிபர் வீட்டில் பிணத்துடன் உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரணி:

ஆரணி அடுத்த சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 52). விவசாயி. அதே பகுதியில் இவருக்கு விவசாய நிலம் உள்ளது. இரவில் தனது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சைக்கிளில் சென்றார்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த டிரைவர் விக்னேஷ்(22). பைக்கில் வந்தார். சித்தேரி கூட்டு ரோடு அருகே வந்தபோது, எதிரே வந்த வந்த நடராஜன் மீது பைக் மோதியது.

இதில், தூக்கி வீசப்பட்ட நடராஜன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நடராஜன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, தகவல் அறிந்த ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான விக்னேஷை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், விபத்து ஏற்படுத்திய விக்னேஷை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, இறந்த நடராஜனின் உறவினர்கள் 300 பேர், விக்னேஷ் வீட்டின் முன் பிணத்தை கிடத்தி ஒப்பாரி வைத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த விக்னேஷ் உறவினர்கள் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News