செய்திகள்

கொடுங்கையூர் தீவிபத்து: பேக்கரி கடை உரிமையாளர் 5 நாட்களுக்கு பின் உயிரிழப்பு

Published On 2017-07-21 05:09 GMT   |   Update On 2017-07-23 05:47 GMT
கொடுங்கையூரில் கடந்த 15-ந்தேதி நள்ளிரவு பேக்கரி கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிலிண்டர் வெடித்ததில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பேக்கரி கடை உரிமையாளர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பெரம்பூர்:

சென்னை கொடுங்கையூரில் கடந்த 15-ந்தேதி நள்ளிரவு பேக்கரி கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிலிண்டர் வெடித்து சிதறியது. தீயை அணைக்க சென்ற தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள், பேக்கரி கடை உரிமையாளர் என மொத்தம் 50 பேர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பேக்கரி கடை உரிமையாளர் ஆனந்தன் (35) மற்றும் ஒருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இந்த விபத்தில் சிலிண்டர் வெடித்து பலத்த தீக்காயம் அடைந்த தீயணைப்பு வீரர் ஏகராஜ் முதலில் உயிர் இழந்தார். அவரை தொடர்ந்து மேலும் 2 பேர் நேற்று உயிர் இழந்தனர். கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பலத்த காயத்துடன் பரந்தாமன், அபிமன்யூ ஆகிய இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக இறந்தனர்.

இந்த நிலையில் மேலும் ஒருவர் நேற்றிரவு இறந்தார். தீ பிடித்து எரிந்த பேக்கரி கடையின் உரிமையாளரான ஆனந்தன் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த மூங்கில் மடுவன் கிராமத்தை சேர்ந்தவர். இவர் சமீபத்தில் தான் இந்த கடையை புதிதாக திறந்து இருக்கிறார். கடை தீப்பிடித்து எரிந்த போது அவருக்கு தகவல் கொடுத்து வரவழைக்கப்பட்டார். முற்றிலும் வெளியே அணைக்கப்பட்ட பிறகு உள்ளே அணைப்பதற்காக ‌ஷட்டர் கதவை ஆனந்தன் திறந்துள்ளார்.

அப்போது தான் பயங்கர சத்தத்துடன் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் ஆனந்தனும் தீயணைப்பு வீரர்களும் தீக்காயத்துடன் தூக்கி வீசப்பட்டனர். 5 நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் நேற்று கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு நேற்றிரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து 19 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News