செய்திகள்

நீர் பிடிப்பு பகுதியில் கன மழை: பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

Published On 2017-06-28 09:42 GMT   |   Update On 2017-06-28 09:42 GMT
நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதால் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டமும் ஒரே நாளில் 1¼ அடி உயர்ந்து 111.50 அடியாக உள்ளது.
கூடலூர்:

தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது பெரியாறு அணை. இதன் மூலம் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த வருடம் கேரளாவில் பருவ மழை தொடங்கியபோதும் நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பெரியாறு அணை நீர் மட்டம் உயராமலேயே இருந்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலையடைந்தனர்.

கடந்த 3 நாட்களாக பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று வரை 1,932 கன அடி நீர் வந்து கொண்டு இருந்தது. அது இன்று 2,629 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் மட்டமும் ஒரே நாளில் 1¼ அடி உயர்ந்து 111.50 அடியாக உள்ளது. 225 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

வைகை அணைப் பகுதியிலும் நீர் வரத்து தொடங்கியுள்ளது. 75 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 40 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 20.40 அடியாக உள்ளது.

மஞ்சளாறு அணை நீர் மட்டம் 31 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 92.28 அடியாக உள்ளது. வருகின்ற 3 கன அடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

மழை அளவு மி.மீட்டரில் வருமாறு பெரியாறு 51.4, தேக்கடி 47.4, கூடலூர் 11.6, சண்முகாநதி அணை 7, உத்தமபாளையம் 10, வீரபாண்டி 32, வைகை அணை 2, மஞ்சளாறு அணை 3, சோத்துப்பாறை 1, கொடைக்கானல் 4.6, கம்பம், கூடலூர் பகுதிகளில் இன்றும் வானம் மேகமூட்டத்துடன் இருப்பதால் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News