செய்திகள்

ஜெயலலிதா காட்டியவழியில் அ.தி.மு.க. அரசு மக்கள் நலனுக்காக செயல்படுகிறது: அமைச்சர் கடம்பூர் ராஜூ

Published On 2017-06-26 12:23 GMT   |   Update On 2017-06-26 12:23 GMT
மறைந்த முதல்வர் ஜெயலலிதா காட்டிய வழியில், அ.தி.மு.க. அரசு மக்கள் நலனில் அக்கறைகொண்டு செயல்படுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
நெல்லை:

தமிழக அரசு சார்பாக ஆண்டுதோறும் நெல்லையில் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான அரசு பொருட்காட்சி நெல்லை மாநகராட்சி பொருட்காட்சி திடலில் நேற்று தொடங்கியது.

தொடக்க விழாவுக்கு ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. முன்னிலை வகித்தார்.

நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வரவேற்றார். எம்.பி.க்கள் விஜிலா சத்தியானந்த், வசந்தி முருகேசன், எம்.எல்.ஏ.க்கள் முருகையா பாண்டியன், இன்பதுரை, அ.தி.மு.க மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொருட்காட்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் பல்வேறு சிறப்பு திட்டங்களை நெல்லை மாவட்டம் பெற்றுள்ளது. அவர் சட்டசபையில் எனக்கு பின்னாலும் கழக ஆட்சிதான் நூறு ஆண்டுகள் நடக்கும் என்றார். அதுபோல் அவரது வழியில் அ.தி.மு.க., அரசு மக்கள் நலனில் அக்கறைகொண்டு செயல்படுகிறது.

நெல்லையில் இன்று தொடங்கி உள்ள பொருட்காட்சியில் காலத்திற்கு ஏற்றாற்போல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 27 அரசு துறைகளில் இருந்து ஸ்டால்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த ஸ்டால்களில் உள்ள திட்டங்கள், அவற்றை பற்றி பொதுமக்களுக்கு பார்வையாளர் ஒருவர் விளக்கம் அளிப்பார்.

ஜெயலலிதா வழியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு 110 விதியில் 7 இடங்களில் அரசு கலைக்கல்லூரி கொண்டுவரப்படும் என்றார். அதில் ஒரு கல்லூரி நெல்லை மாவட்டத்தில் தொடங்கப்பட உள்ளது. நெல்லை ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா கண்ட லட்சியம், கனவுகளை நனவாக்கும் வகையில் ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து செய்துகொண்டு இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அமைச்சர் ராஜலட்சுமி பேசுகையில் ‘‘இந்த பொருட்காட்சியில் மகளிர்களுக்கான பல்வேறு திட்டங்கள் பற்றிய ஸ்டால்கள் உள்ளன. பெண்கள் அந்த ஸ்டால்களில் உள்ள திட்டங்களை தெரிந்துகொண்டு, வருமானம் வரும்படியான தொழில்களை செய்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதிபடி 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. கூடிய விரைவில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும்.’’என்றார்.

கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசுகையில்,‘‘ இந்த பொருட்காட்சி பிளாஸ்டிக் இல்லாத பொருட்காட்சியாக நடைபெறும். பிளாஸ்டிக் பயன்பாட்டை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். நெல்லை மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்ற மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.’’ என்றார்.

விழாவில், மாவட்ட திட்ட இயக்குனர் பழனி, அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், அவைத்தலைவர் சங்கரலிங்கம், மானூர் யூனியன் முன்னாள் சேர்மன் கல்லூர் வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிகளை செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜெகவீரபாண்டியன் தொகுத்து வழங்கினார். செய்திமக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குனர் ரவீந்திரன் நன்றி கூறினார்.

விழாவில் வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் துறை,தாட்கோ, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து 436 பயனாளிகளுக்கு 3 கோடியே 67 லட்சத்து 55 ஆயிரத்து 285 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த பொருட்காட்சி 45 நாட்கள் நடைபெறுகிறது. இதில் 27 அரசுத்துறை அரங்கங்களும், 12 அரசு சார்பு நிறுவனங்களின் அரங்குகளும், 50 க்கும் மேற்பட்ட தனியார் கடைகள், ராட்டினங்கள் உள்ளிட்டவையும் இடம்பெற்று உள்ளன. திடலில் இருந்து சந்திப்பு பஸ் நிலையம் மற்றும் நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு இரவு 11 மணி வரை பஸ் வசதியும் செய்யபப்ட்டு உள்ளது.
Tags:    

Similar News