search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடம்பூர் ராஜூ"

    • நீட் தேர்வுக்கு மத்திய அரசு தற்போது வரை விலக்கு அளிக்கவில்லை.
    • விளம்பர அரசியலை அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிநகர் 4-வது தெருவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் வாறுகால் மற்றும் பேவர் பிளாக் சாலையை முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

    கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் தமிழகத்திற்காக என்ன சாதனைகளை செய்தார்கள். பட்டியலிட அண்ணாமலை தயாரா?. பா.ஜ.க. தமிழர் நலன் சார்ந்த பிரச்சினைகளை இதுவரை ஒன்றை கூட தீர்க்கவில்லை. தமிழகத்தில் எய்ம்ஸ் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்று வரை அடிக்கல் நாட்டப்பட்டதாகவே இருக்கிறது.

    நீட் தேர்வுக்கு மத்திய அரசு தற்போது வரை விலக்கு அளிக்கவில்லை. என்.எல்.சி. நிலம் எடுப்பு தொடர்பாக மத்திய அரசு பாராமுகம் காட்டியுள்ளது. இது போன்ற பிரச்சினைகளை அண்ணாமலை பேசினால் நன்றாக இருக்கும். விளம்பர அரசியலை அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறார். அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அந்த விளம்பரம் தமிழகத்தில் எடுபடாது. அதே போல் காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்த காலத்தில் இந்திராகாந்தி, கருணாநிதி ஆகியோர் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தனர்.


    தேசிய கட்சிகளால் எந்த நலனும் இல்லை என்ற ஜெயலலிதாவின் முடிவையே எடப்பாடி பழனிசாமி தற்போது எடுத்துள்ளார். அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பற்றி எல்லாம் அண்ணாமலை விமர்சிக்கிறார். அதையெல்லாம் ஓ.பன்னீர்செல்வம் கேட்கவில்லை.

    அ.தி.மு.க. கூட்டணிக்கு நிறைய கட்சிகள் வர உள்ளன. நாங்கள் தற்போது தான் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளோம். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே வேகம் எடுக்கும். அந்த நடைமுறையை தான் நாங்கள் பின்பற்றி வருகிறோம். விரைவில் நீங்கள் எதிர்பார்க்காத மெகா கூட்டணி அ.தி.மு.க. தலைமையில் உருவாகும். 39 தொகுதிகளிலும் வெற்றியை பெறுகிற கூட்டணியாக அ.தி.மு.க. இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 96-ம் ஆண்டு பா.ஜ.க. அரசு மத்தியில் அமைவதற்கு அ.தி.மு.க. தான் உறுதுணையாக இருந்தது.
    • அ.தி.மு.க.வை முந்த எந்த இயக்கமும் தமிழகத்தில் இல்லை.

    கோவில்பட்டி:

    பா.ஜனதா நிர்வாகிகள் சிலர் அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணி தர்மத்தினை மீறி செயல்படுவதாக கூறி எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை பா.ஜ.க.வினர் 4 பேர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எரித்தனர்.

    இந்நிலையில் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூரில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜ.க. ஐ.டி. விங் நிர்வாகி அ.தி.மு.க.வில் இணைந்தது கண்டு அண்ணாமலை மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் ஏன் பதற்றப்பட வேண்டும் என்பது எங்களுக்கு புரியாத புதிராக உள்ளது. ஒரு கட்சியில் இருந்து பிரிந்து மற்ற கட்சிகளுக்கு செல்வது சகஜமான ஒன்று.

    அ.தி.மு.க.வில் இருந்து பலரும் பா.ஜ.க.விற்கு சென்று உள்ளனர். அ.தி.மு.க.விற்கு பதில் தி.மு.க.வில் நிர்மல் குமார் இணைந்து இருந்தால் என்ன செய்திருப்பார்கள்.

    கோவில்பட்டியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்தவர் ஒரு விளம்பர விரும்பி.

    இந்த சம்பவத்திற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவர் நடவடிக்கை எடுப்பது குறித்து பொறுத்து இருந்து பார்க்கலாம்.

    அண்ணாமலை என்ன எதிர்வினை ஆற்றுவார் என்று பார்ப்போம். ஒன்றிய அரசு என்று கூறும் தி.மு.க.விற்கு எதிராக பேசி தான் வருகிறார் தவிர எந்த எதிர்வினையும் அவர் ஆற்றவில்லை. அ.தி.மு.க. வரலாறு அண்ணாமலைக்கு தெரியாது. அவர் இன்னும் அரசியலில் பக்குவப்படவில்லை. தானாக விரும்பி வந்து கட்சியில் சேருபவர்களை எந்த அரசியல் கட்சியினரும் சேர்த்துக் கொள்வார்கள்.

    இந்த அரசியல் அரிச்சுவடி கூட அண்ணாமலைக்கு தெரியவில்லை. எங்களுடன் பா.ஜ.க. கூட்டணி சேர்ந்த காரணத்தினால் தான் இன்றைக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் அந்த கட்சிக்கு கிடைத்துள்ளனர்.

    96-ம் ஆண்டு பா.ஜ.க. அரசு மத்தியில் அமைவதற்கு அ.தி.மு.க. தான் உறுதுணையாக இருந்தது. அ.தி.மு.க.வை முந்த எந்த இயக்கமும் தமிழகத்தில் இல்லை. தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த கூட்டத்திலேயே பெண்ணுக்கு தி.மு.க. நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
    • கட்சியில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது உரிய புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள துலுக்கன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆவுடைதங்கம் (வயது 75). மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே மனைவி இறந்து விட்டார்.

    ஆவுடைதங்கத்தின் தங்கை பத்மாவதி (65). இவருக்கு திருமணமான சில ஆண்டுகளிலே கணவன் இறந்து விட்டார். இதன் காரணமாக ஆவுடைதங்கம் தனது தங்கை பத்மாவதியின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளார்.

    இதனை தொடா்ந்து விளாத்திகுளம் தொகுதி அ.தி.மு.க. சார்பில் ஆவுடைதங்கம், பத்மாவதி ஆகியோருக்கு புத்தாடைகள், காலணிகள் மற்றும் உணவுப் பொருட்களை முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ வழங்கினார்.

    பின்னர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா காலகட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியின் போது அவசர நிலை கருதி மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் செவிலியர் பயிற்சி பள்ளியில் படித்த செவிலியர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டார்கள்.

    தற்போது எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர்ந்திருந்தால் அவர்கள் நிரந்தர பணியாளர்களாக பணி நியமனம் செய்யப்பட்டு இருப்பார்கள்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து கேட்பதற்கு சட்டத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியதில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று தெரிவித்துள்ளது.

    அ.தி.மு.க. பொதுக்குழு குறித்து உச்ச நீதிமன்றத்தில் இறுதி கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் நல்ல தீர்ப்பும் வர உள்ளது. அதன் பிறகு இப்பிரச்சனைகள் எல்லாம் நிறைவு பெற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று நிலைநிறுத்தப்படும்.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பொள்ளாச்சியில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மையப்படுத்தி தமிழகம் முழுவதும் சென்று கனிமொழி எம்.பி. பேசி வந்தார். அப்போதைய அ.தி.மு.க. அரசு பாரபட்சம் பார்க்காமல் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்தோம். அந்த ஒரு சம்பவத்தை வைத்து 2021-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மையக் கருத்தாக அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பிரசாரம் செய்தனர்.

    சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த கூட்டத்திலேயே பெண்ணுக்கு தி.மு.க. நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

    கட்சியில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது உரிய புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கட்சி மற்றும் சின்னம் எடப்பாடி பழனிசாமியிடம் தான் உள்ளது.
    • ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார்.

    தூத்துக்குடி :

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கோவில்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஓ.பன்னீர்செல்வம் நடத்திய கூட்டத்தில் ஏமாற்றத்தின் வெளிப்பாடாகவே அவர் பேசியுள்ளார். அவர் இருக்கும் போதுதான் உள்கட்சி அமைப்பு தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை கொண்டு தான் பொதுக்குழு கூட்டம் நடந்தது. பொதுக்குழுவில் வைக்கப்பட்ட வரவு-செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. கட்சி மற்றும் சின்னம் ஆகியவை எடப்பாடி பழனிசாமியிடம் தான் உள்ளது. ஆகவே தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஓ.பன்னீர்செல்வம்தான் தனிக்கட்சி தொடங்க வேண்டும்.

    அ.தி.மு.க.வுடன் தான் பா.ஜ.க. கூட்டணியில் உள்ளது. நானும் ரவுடி தான் என்று வடிவேலு சொன்ன மாதிரி பா.ஜ.க. தனக்கு மரியாதை தருகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார். அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார்.

    டி.டி.வி. தினகரன், சசிகலா என யாருடன் வேண்டுமானாலும் ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி வைத்துக் கொள்ளலாம். அது அவரது விருப்பம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர்களை அழைத்து வந்து ஓ.பி.எஸ். கூட்டம் நடத்தி அவர்களை ஏமாற்றி கொள்கிறார்கள்.
    • ஒரு மாய தோற்றத்தினை உருவாக்குவதினால் பயன் எதுவும் இல்லை.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., இன்று தேசிய கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    யார் யாருடன் (டி.டி.வி.-பா.ஜ.க) இணைந்தாலும் அ.தி.மு.க. தனித்தன்மையுடன் இருக்கும். எங்களுடைய நிலைப்பாட்டில் எங்கள் பயணம் சீராக செல்லும்.

    அ.தி.மு.க. தலைமை ஏற்று டி.டிவி.தினகரன் கட்சி கூட்டணி வர விரும்பினால் அதை தலைமை தான் முடிவு செய்யும். தற்பொழுது எவ்வித தேர்தலும் இல்லை.

    இதனால் கூட்டணி பற்றி பேச வேண்டிய, சிந்தக்க வேண்டிய அவசியம் எழவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஊர் தோறும் கிராம சபை கூட்டம் நடத்தினர். ஆனால் தற்பொழுது அப்படி எதுவும் செய்யவில்லை.

    முதல்-அமைச்சர் கூட கிராம சபை கூட்டத்திற்கு செல்வதில்லை. தாழ்த்தப்பட்ட, பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசிய கொடி ஏற்ற அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறுவது ஜனநாயகத்திற்கு அவமதிப்பு. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, அவ்வாறு செய்பவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

    கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர்களை அழைத்து வந்து ஓ.பி.எஸ். கூட்டம் நடத்தி அவர்களை ஏமாற்றி கொள்கிறார்கள். ஒரு மாய தோற்றத்தினை உருவாக்குவதினால் பயன் எதுவும் இல்லை. அ.தி.மு.க. என்று ஓ.பி.எஸ் கூறுவதால் அவருக்கு தான் காலம் வீணாகி வருகிறது.

    அ.தி.மு.க. என்ற பெயரை பயன்படுத்தினால் ஓ.பி.எஸ்.-க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.

    சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. அதனை காக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்பதனை எதிர்கட்சியாக நாங்கள் சுட்டிகாட்டுவோம்.

    அ.தி.மு.க. ஆட்சியில் அனிதா என்ற மாணவி இறப்பினை வைத்து தி.மு.க. அரசியல் செய்தது. அனிதா இறப்பு என்பது மிகவும் வருந்தக்கூடிய விஷயம். ஆனால் இன்றைக்கு 11 மாணவர்கள் இறந்துள்ளார்கள்.

    அவர்களை போன்று இறப்பினை வைத்து நாங்கள் அரசியல் செய்ய மாட்டோம். மக்கள் பிரச்சினைகளை தினந்தோறும் அறிக்கை வாயிலாக சுட்டிக்காட்டிக்கொண்டு இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவல்பட்டியில் 4 இடங்களில் சாலை, வாறுகால் அமைக்கும் பணி மற்றும் பயணிகள் நிழற்குடை கட்டுமானப் பணிகள் நடைபெற்றது.
    • ரூ.14 லட்சத்தில் பேவர் பிளாக் மற்றும் வாறுகால் அமைக்கும் பணிகளையும் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், கோவில்பட்டி ஊராட்சி மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட 4 இடங்களில் சாலை, வாறுகால் அமைக்கும் பணி மற்றும் பயணிகள் நிழற்குடை கட்டுமானப் பணிகளை கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    சாலை பணிகள்

    அதன்படி இனாம்மணி யாச்சி ஊராட்சி மீனாட்சி நகர் 6-வது தெருவில் ரூ.7.69 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக், வாறுகால், கோவில்பட்டி பிரதான சாலையில் ரூ. 9 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைத்தல் பணிகளை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    மேலும் மின் அறையை சுற்றி பாதுகாப்பு சுவர் மற்றும் பேவர் பிளாக் தரை, முன்னாள் எம்.எல்.ஏ. வேலுச்சாமி வீட்டுத் தெரு வில் ரூ.14 லட்சத்தில் பேவர் பிளாக் மற்றும் வாறுகால் அமைக்கும் பணிகளையும் தொடங்கி வைத்தார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி சத்யா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையர் சுப்புலட்சுமி, பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் கெங்கா பரமேஸ்வரி, நகராட்சி உதவி பொறியாளர் சரவணன்,

    மாவட்ட மாணவரணி செல்வகுமார், மகளிரணி இணை செயலாளர் சுதா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹேமலா, அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன், நிலைய மருத்துவ அதிகாரி பூவேஸ்வரி, அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலர்கள் அன்புராஜ், அய்யாத்துரைப் பாண்டியன், மாவட்ட வக்கீல் அணி செயலர் சிவபெருமாள், நகர்மன்ற உறுப்பினர் கவியரசன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர்கள் ராமர், ரத்தினவேல், நகர பொருளாளர் ஆரோக்கிய ராஜ், நிர்வாகிகள் ஆபிரகாம் அய்யாதுரை, பழனிகுமார், செண்பக மூர்த்தி, கிருஷ்ண மூர்த்தி, ஆவின் பால் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், அ.தி.மு.க. நிர்வாகிகள் வக்கீல் சங்கர்கணேஷ், ஆரோக்கிய ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×