செய்திகள்
பரமசிவம், கவிதா

உடுமலை அருகே கணவரின் 2-வது திருமணத்தை தடுத்து நிறுத்திய மனைவி

Published On 2017-06-26 08:19 GMT   |   Update On 2017-06-26 08:19 GMT
உடுமலை அருகே இன்று நடக்கவிருந்த கணவரின் 2-வது திருமணத்தை முதல் மனைவி தடுத்து தடுத்து நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடுமலை:

பல்லடம் அருகே உள்ள ஜல்லிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 42), கூலி தொழிலாளி. இவரது மனைவி கவிதா (33). இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. 11 வயதில் ஒரு மகன் உள்ளான்.

பரமசிவத்துக்கும், கவிதாவுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனைவியை பிரிந்து பரமசிவம் வாழ்ந்து வந்தார்.

இதற்கிடையே பரமசிவம் 2-வது திருமணம் செய்ய முடிவு செய்தார். அதன்படி ஆனைமலையை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்ய பேசி முடிவு செய்யப்பட்டது.

இவர்களது திருமணம் இன்று (26-ந்தேதி) நடைபெறுவதாக இருந்தது. மணப்பெண் வீட்டில் திருமணத்துக்கு தடபுடலாக ஏற்பாடுகள் நடந்தது. இதில் உறவினர்களும் வந்திருந்தனர்.

இதற்கிடையே கணவர் பரமசிவம், வேறொரு பெண்ணை 2-வது திருமணம் செய்ய உள்ள தகவல் மனைவி கவிதாவுக்கு கிடைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே இதுகுறித்து உடுமலை மகளிர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் மகளிர் போலீசார், மணப்பெண் வீட்டுக்கு விரைந்து வந்தனர். அப்போது மாப்பிள்ளை கோலத்தில் புதுசட்டை, வேட்டி அணிந்து பரமசிவம் இருந்தார்.

உடனே மணப்பெண்ணின் உறவினர்களுக்கு , பரமசிவம் முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்ய முயல்வதை போலீசார் தெரிவித்தனர். இதை கேட்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே ஆவேசத்துடன் புதுமாப்பிள்ளை கோலத்தில் இருந்த பரமசிவத்தை பிடித்து அடித்து உதைத்தனர். இதில் அவரது சட்டை கிழிந்தது.

இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசார், அவர்களிடம் இருந்து பரமசிவத்தை மீட்டனர்.

போலீசார் பரமசிவத்தின் திருமணத்தை தடுத்து நிறுத்தியதுடன் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு பரமசிவம், அவரது மனைவி கவிதா ஆகியோரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News