செய்திகள்

திருச்செங்கோட்டில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் நகை கொள்ளை

Published On 2017-06-17 11:36 GMT   |   Update On 2017-06-17 11:36 GMT
திருச்செங்கோட்டில் இன்று அதிகாலை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, கூட்டபள்ளி காலனி அருகே உள்ள வேளாளர் காலனி பகுதியில் வசித்து வருபவர் முருகேசன் (வயது 49). இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர் கடந்த 13-ந்தேதி அன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கேரளாவுக்கு சென்றார்.

இந்த நிலையில் இன்று காலை அவருடைய வீட்டின் முன் பக்க கதவு திறந்து கிடந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் வீட்டில் ஆட்கள் யாரும் இல்லை. ஆனால் கதவு மட்டும் திறந்து கிடக்கிறதே என்று சந்தேகம் அடைந்தனர்.

இது குறித்து உடனே திருச்செங்கோடு நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முருகேசன் வீட்டுக்குள் சென்று பார்வையிட்டனர்.

அப்போது அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த துணிகள் அனைத்தும் கீழே சிதறி கிடந்தன. அதுபோல் அலமாரியில் வைத்திருந்த பொருட்களும் கீழே சிதறி கிடந்தன. இதனை தொடர்ந்து வீட்டில் படுக்கை அறை மற்றும் சமையல் அறை ஆகியவற்றுக்குள் சென்றும் போலீசார் பார்வையிட்டனர். அங்கும் இதே போல் தான் பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.

இது குறித்து போலீசார் கேரளாவுக்கு குடும்பத்துடன் சென்ற முருகேசன் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு அவரிடம் கேட்டப்போது தான் பீரோவில் 10 பவுன் தாலி செயின் மற்றும் 3 பவுன் வளையல்கள் வைத்திருந்ததாக தெரிவித்தார்.

ஆகவே அவர் கேரளாவுக்கு குடும்பத்துடன் சென்றதை மர்ம நபர்கள் நோட்டமிட்டு இன்று அதிகாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத சமயம் பார்த்து அவருடைய வீட்டுக்குள் புகுந்து 13 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்று இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு பீரோ, கதவு உள்ளிட்டவைகளில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.
Tags:    

Similar News