செய்திகள்

விழுப்புரம் அருகே போலீஸ்காரர் வீட்டில் ரூ.4 லட்சம் நகை கொள்ளை

Published On 2017-05-22 11:03 GMT   |   Update On 2017-05-22 11:03 GMT
விழுப்புரம் அருகே போலீஸ்காரர் வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் சோதனை சாவடியில் தலைமை ஏட்டாக பணியாற்றி வருவபவர் சீனிவாசன்(வயது 44).

இவரது வீடு வளவனூர் போலீஸ்நிலையம் எதிரில் உள்ள தொட்டி என்ற இடத்தில் உள்ளது. இவரது வீட்டில் அவரது அண்ணன் ராமகிருஷ்ணன் என்பவரும் வசித்து வருகின்றார். அண்ணன் தம்பி இருவரும் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.

நேற்று இரவு 10 மணியளவில் அனைவரும் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர். நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் சீனிவாசன் வீட்டின் பின்பக்க கதவை திறந்து உள்ளே நுழைந்தனர்.

பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த பீரோவில் திறந்து அதில் இருந்து 19 பவுன் தங்க நகைகள், ¼ கிலோ வெள்ளிப்பொருட்களையும் கொள்ளையடித்து விட்டு சென்று விட்டனர்.

இன்று காலை 5 மணியளவில் ராம கிரு‌ஷண்ணன் எழுந்து வீட்டின் பின்புறம் சென்றார். அப்போது கதவு திறந்து கிடப்பதை கண்டு வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு பீரோ திறந்து கிடப்பதையும், கீழே பொருட்கள் சிதறிக்கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பீரோவை பார்த்தபோது அதில் இருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. கொள்ளைபோன நகைகளின் மதிப்பு ரூ.4½ லட்சம் ஆகும்.

இதுகுறித்து ராமகிருஷ்ணனும், அவரது தம்பி சீனுவாசனும் வளவனூர் போலீசில் புகார் செய்தனர். உடனே இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொள்ளைபோன வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் கொள்ளையில் துப்புதுலக்க கைரேகை நிபுணர் உதவி இயக்குனர் சண்முகம் தலைமையில் கைரேகை நிபுணர்களும் ரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடிக்கப்பட்டது.

போலீஸ்காரர் வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News