செய்திகள்

நாகர்கோவிலில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை மிரட்டல்

Published On 2017-05-21 12:02 GMT   |   Update On 2017-05-21 12:02 GMT
நாகர்கோவிலில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் மண்எண்ணை கேனுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்:

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்தில் அகற்றப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக புதிய கடைகளை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். புதிய கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களும், பெண்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகர்கோவில் கோட்டார் அருகே உள்ள பெரியவிளை பகுதியான ஏ.ஆர். கேம்ப் ரோட்டில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அங்கு டாஸ்மாக்கடை திறக்க கூடாது என்று கூறி கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

அதன் பிறகும் டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்தது. மேலும் கட்டிட கட்டுமான பணியும் முடியும் தருவாய்க்கு வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு புதிதாக கட்டப்பட்டு வரும் கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களில் முதியவர் ஒருவர் கையில் மண்எண்ணை கேனுடன் வந்து போராட்டத்தில் பங்கேற்றார். இங்கு டாஸ்மாக் கடையை திறந்தால் தீக்குளிப்பேன் என மிரட்டல் விடுத்தார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த நேசமணி நகர் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி கூறினர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News